மஞ்சள் அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். நம் வீட்டு பூஜை அறையில், சமையல் அறையில், குளியலறை என நம் அன்றாட வாழ்வில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உணவில் மஞ்சள் சிறந்த நிறம் ஊட்டியாக இருந்தாலும் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், குர்கூமின் என்ற மூலப் பொருள்கள் உயிர் கொல்லி நோய்களுக்கு மருந்துகள் செய்ய பயன்படுகிறது. சமீபத்தில் கூட கேன்சர் நோயை விரட்டுவதற்கு இது சிறப்பாக செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல், சரும நோய்கள் என நம் உடலின் அனைத்து நல் இயக்கித்திற்கும், வீட்டின் ஆரோக்கியத்திற்கும் மஞ்சளை பயன்படுத்தி வருகிறோம்.
பொங்கல் கொண்டாட நாம் வாங்கிய பசும் மஞ்சள் நீண்ட நாள் வீணாகாமல் இருக்க, இதுபோல செய்து வைத்துக்கொள்ளலாம். முதலில் கொத்து மஞ்சளில் மண், அழுக்கு நீங்க நன்றாக கழுவி அதனை துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக உலர்ந்த பின் ஒரு கூடையில் காட்டன் துணி விரித்து அதில் மஞ்சளை பரப்பி வைத்து விடவும். ஒரு சில இடங்களில் முளை விட்டிருந்தால் அது மேலும் துளிர்விடாமல் இருக்க கிள்ளி எரிந்து விடலாம். பிறகு பரப்பி வைத்த மஞ்சள் கிழங்குகள் மேலே, மீண்டும் ஒரு காட்டன் துணியை கொண்டு மூடி விடவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அதன் மேல் சிறிது தண்ணீர் தெளித்து வந்தால் ஆறு மாதம் ஆனாலும் கெட்டு போகாது. எக்காரணம் கொண்டும் குளிர் சாதனப் பெட்டியிலோ அல்லது பிளாஸ்ட்டிக் கவரிலோ வைக்கக் கூடாது, விரைவில் அழுகி போகும் வாய்ப்பு உண்டு.
இதையும் படிங்க: முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்க உருளைக்கிழங்கு போதும்...இது சாத்தியமா?

மஞ்சள் கிழங்கின் மேல் உள்ள வேர் மற்றும் தோலை நன்றாக சேத்தி எடுத்து விட்டு அதனை கிரேட்டர் வைத்து துருவி கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு பரந்த பாத்திரத்தில் காட்டன் துணியின் மேல் பரப்பி வெயிலில் இரண்டு நாள் காய வைத்தாலே மொருமொரு என்று ஆகிவிடும். இதனை மிக்சி ஜாரில் நன்றாக பொடி செய்து சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
நன்றாக சுத்தம் செய்த பசும் மஞ்சள் கிழங்கை இட்லி பாத்திரத்தில் வைத்து 30 நிமிடம் வேக வைத்த பின் சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதனை வெயிலில் உலர்த்தி காய வைத்து, பிறகு பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம்.

முளை விட்ட மஞ்சள் கிழங்குகளை மண்ணில் புதைத்து வைத்து தினமும் தண்ணீர் விட்டு பராமரித்து வந்தால் சில நாட்களில் அது செடியாக வளர்ந்து பலன் தரும். நம் வீட்டு மொட்டை மாடியில் தொட்டியில் வைத்து வளர்த்து வரலாம். இப்படி செய்தால் அடுத்த பொங்கலுக்கு மஞ்சள் கொத்தை வெளி்யில் வாங்காமல் நம் தோட்டத்திலுள்ள கிழங்கை வைத்தே கொண்டாடலாம்.
இரண்டு டம்பளர் பாலை கொதிக்க வைத்து அதில் துருவிய மஞ்சள் கிழங்கை அரை தேக்கரண்டி, மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட தொண்டை சளி, வறட்டு இருமல் நீங்கி பலன் தரும். பசும் மஞ்சள் கிழங்கை ஊறுகாயாக செய்து சேமித்து வைத்தும் பயன்படுத்தலாம். அதன் செய்முறை பின்வருமாறு.

மஞ்சள் ஊறுகாய் செய்முறை ;
மஞ்சள் துருவியது - 140 gm
கடுகு - 1ஸ்பூன்
வெந்தயம் - 1ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
பூண்டு - 20 gm அல்லது பெருங்காயம் 5gm
உப்பு - தேவைக்கேற்ப
தனி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 5ml
நல்ல எண்ணெய் - 50 ml
மஞ்சளை நன்றாக கழுவி தோல் நீக்கி அதனை துருவி வைத்து கொள்ளவேண்டும். அதன் மேல் தேவையான அளவு உப்பை சேர்த்து 30 நிமிடம் ஊற விடவும். பிறகு அடுப்பில் ஒரு வாணலியில் 1ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து லேசாக வாசனை வரும் அளவுக்கு வறுத்தப்பின் பொடியாக அரைத்து, இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தனி மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். ஏற்கனவே மஞ்சளுடன் உப்பு சேர்த்ததால் நீர் விட்டு இருக்கும், அதனுடன் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 10 ml எலுமிச்சை சாற்றை இந்த கலவையில் ஊற்றி விட்டு அதன் மேல் காய்ச்சிய நல்ல எண்ணெய் 50 ml சேர்த்து நன்றாக கிளறி வெயிலில் இரண்டு நாள் வைத்து எடுத்தால் சுவையான மஞ்சள் ஊறுகாய் ரெடி. இது நீண்ட நாள் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.
இவ்வாறு நாம் ஆரோக்கியமான முறையில் மஞ்சளை பயன்படுத்தலாம். வர்த்தக ரீதியாக சில ரசாயன கலவைகள் கொண்டு மஞ்சள் தூள் தயாரித்து பாக்கட்டில் அடைத்து விற்பனை செய்வதை, முடிந்தளவு வாங்காமல் இருப்பது சிறந்தது.
இதையும் படிங்க: முகம் என்றும் இளமையுடன் இருக்கணுமா ? இதை பண்ணி பாருங்க