புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டது. பல இந்து வீடுகளில் இந்த மாதத்தில் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்து சைவ உணவுகளையே விரும்பி உட்கொள்கிறார்கள். ஆன்மீகக் காரணங்களால் இந்த பழக்கத்தை பின்பற்றுபவர்கள் அதிகம். ஆனால் அசைவ உணவுகளில் இருக்கும் பல முக்கியமான சத்துக்கள் சைவ உணவுகளில் குறைவாக இருப்பதால், சரியான மாற்று உணவுகளை தேர்ந்தெடுக்காவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அசைவ உணவுகளில் கோழி, ஆடு, மீன் போன்றவை தாங்களே பல்வேறு உணவுகளை உட்கொள்வதால் அவற்றின் இறைச்சியில் பல சத்துக்கள் செறிவாக இருக்கும். ஆனால் சைவ உணவுகளில் ஒவ்வொரு உணவிலும் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே இருக்கும். எனவே புரட்டாசி மாதத்தில் அசைவத்தை தவிர்ப்பவர்களோ அல்லது முழுமையான சைவ உணவாளர்களோ தினசரி உணவில் சில முக்கிய சைவ உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர் ஒருவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அசைவ உணவுகளுக்கு இணையான சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகளைப் பட்டியலிட்டுள்ளார். அந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு விரிவாகப் பார்ப்போம். முதலாவதாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள். கர்ப்பிணிகளுக்கு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இந்த சத்து மிகவும் அவசியம். அதனால்தான் மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் ஒமேகா-3 மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படிங்க: கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!
ஆனால் இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது. மீன்களில் குறிப்பாக சூரை, சால, நெத்திலி, அயில, வஞ்சரம் போன்றவற்றில் இந்த சத்து அதிகம். சைவ மாற்றாக வால்நட்ஸ், சியா விதை, ஆளி விதை ஆகியவற்றை தினமும் சேர்க்கலாம். இந்த விதைகளை தயிர் அல்லது ஸ்மூத்தியில் சேர்த்து உட்கொள்ளலாம். காலையில் சிறிது வால்நட்ஸ் சாப்பிடுவதும் நல்லது.
இரண்டாவதாக லீன் புரோட்டீன் அதாவது கொழுப்பு குறைந்த புரோட்டீன். சிக்கனில் இது அதிகம் இருந்தாலும் சைவ உணவுகளில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரும் சோயாவில் இருந்து கிடைக்கும் டோஃபுவும் சிறந்த மாற்றுகள். இந்த உணவுகள் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. பன்னீர் குருமா அல்லது டோஃபு வறுவல் போன்ற உணவுகளை வாரத்திற்கு சில முறை சேர்க்கலாம்.

மூன்றாவதாக கொலாஜன். இது தோல், மூட்டுகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். கொலாஜன் குறைந்தால் மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கடல் உணவுகளில் இது அதிகம் இருந்தாலும் சைவ உணவுகளில் சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை), பெர்ரி வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் உதவுகின்றன. இந்த உணவுகள் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவதோடு, பாதாம் அல்லது சூரியகாந்தி விதைகளை சேர்க்கலாம்.
நான்காவதாக கொழுப்புள்ள புரோட்டீன். ஆடு, மாடு குறிப்பாக மட்டனில் இது அதிகம். சைவ மாற்றாக மீல் மேக்கர் எனப்படும் சோயா தயாரிப்புகள் சிறந்தவை. இதன் சுவை மட்டனைப் போன்றே இருப்பதால் பலருக்கு பிடிக்கும். சோயா குருமா அல்லது வறுவல் தயாரித்து உட்கொள்ளலாம். இது புரோட்டீனுடன் கொழுப்பையும் வழங்குகிறது.
ஐந்தாவதாக இரும்புச்சத்து. இரத்த சோகை, நரம்பு மற்றும் எலும்பு பிரச்சினைகளைத் தடுக்க இது அவசியம். அசைவ உணவுகளில் மட்டன், முட்டை, சிக்கன் ஆகியவற்றில் இருந்தாலும் சைவ உணவுகளில் கீரைகள், பச்சை காய்கறிகள், விதைகள், நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்களில் அதிகம் உள்ளன.
குறிப்பாக முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பால் குடிப்பதற்கு முன் எலுமிச்சை சேர்த்து உட்கொண்டால் இரும்பு உறிஞ்சுதல் அதிகரிக்கும்.இவ்வாறு சரியான சைவ உணவுகளைத் திட்டமிட்டு சேர்த்தால் அசைவ உணவு இல்லாமலேயே தேவையான அனைத்து சத்துக்களையும் பெறலாம். புரட்டாசி மாதத்தில் இந்த மாற்று உணவுகளைப் பின்பற்றி ஆரோக்கியமாக இருப்போம்.
இதையும் படிங்க: காலை உணவுப் பழக்கங்கள்: உடல்நலத்திற்கு உதவும் 15 இயற்கை உணவுகள்..!! தெரிந்துகொள்ளுங்கள்!!