தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய கோவில்களிலும், மருதமலை, குன்றத்தூர், வல்லக்கோட்டை, வடபழனி உள்ளிட்ட பிற பிரசித்தி பெற்ற முருகன் தலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முழக்கங்கள் வானை அதிரச் செய்கின்றன.

குறிப்பாக, உலகப் பிரசித்திபெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. திண்டுக்கல், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் காவடி சுமந்து, பால் குடம் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். கோவில் நிர்வாகம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை கட்டண தரிசனங்களை ரத்து செய்து அனைத்து வழிகளையும் இலவசமாக்கியதால், பக்தர்கள் மிகுந்த எளிமையுடன் தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கந்தனுக்கு அரோகரா..!! நாளை தைப்பூசம்..!! திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!
கிரிவலப் பாதையில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களை பகுதி பகுதியாக அனுப்பி நெரிசலைத் தவிர்க்கப்பட்டது. மேலும் கோவிலில் 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும் திருநீறு பூசி, காவடி சுமந்து, அலகு குத்தி பக்தி கோஷங்களுடன் நடனமாடினர்.

மருதமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமி திருவாபரணங்கள் அணிந்து மணக்கோலத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் தரிசனம் செய்தனர். தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மருத்துவ முகாம்கள், அன்னதானம், குடிநீர் வசதிகள், தீயணைப்பு பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா முருகப் பெருமானின் அருளால் பக்தர்களுக்கு மன நிறைவையும், பக்தி உணர்வையும் தருகிறது.
இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..!! பக்தர்களுக்கு இதற்கு தடை..!!