சென்னை ஆவடியில் உள்ள விமானப்படை மையத்தில் நடைபெற்ற பணியாளர் சேர்க்கை எழுத்துத் தேர்வில் அதிர்ச்சி அளிக்கும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது ஆள்மாறாட்டம் மற்றும் ரகசிய மின்னணு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்ததைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தேர்வில் பங்கேற்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானப்படை பணியாளர் சேர்க்கைக்காக ஆவடி விமானப்படை மையத்தில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்று கொண்டிருந்தபோது சிலரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேர்வு விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் மற்ற தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. மேலும், மற்ற இருவர் ஜி.எஸ்.எம். டிரான்ஸ்மிட்டர் உள்ளிட்ட ரகசிய மின்னணு கருவிகளை பயன்படுத்தி வெளியில் இருந்து பதில்களை பெற்று எழுதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முறைகேட்டின் பின்னணியில் பெரிய கும்பல் செயல்பட்டதா, மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பணியாளர் சேர்க்கை தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு... இன்று மட்டும் சிறப்பு e-KYC முகாம்; விரல் ரேகை பதிவு கட்டாயம் என முக்கிய அறிவிப்பு!