செல்லா நோட்டு நடவடிக்கையின் மூலம் பொதுமக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டு, தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிப்பது எளிய மற்றும் நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அப்பட்டமான பொருளாதாரத் தாக்குதல் என்றும், பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் லாபம் கொழிக்க வழிவகை செய்யும் இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
செல்லா நோட்டு அறிவிப்பின் போது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்று, மக்களைப் பணமில்லாப் பரிவர்த்தனைக்கு மாற்றிய ஒன்றிய மோடி அரசு, தற்போது இலவசமாக இருந்த யுபிஐ சேவைக்குக் கட்டணம் விதிக்கும் முடிவை எடுத்துள்ளது.
இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, வரும் அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.300 வரை MDR கட்டணம் விதிக்கப்பட உள்ளது. மேலும், ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே வரிகள் மற்றும் பல்வேறு சேவைக் கட்டணங்களால் அல்லலுறும் மக்கள் மீது, சொந்தப் பணத்தைக் கையாளுவதற்கே கட்டணம் செலுத்தும் நிலையை அரசு உருவாக்கியுள்ளது. வணிகர்களுக்கான கட்டணம் என்று பூசி மெழுகினாலும், இறுதியில் இக்கட்டணச் சுமை சரக்கு மற்றும் சேவைகளின் விலையில்தான் ஏற்றப்படும்.
இதனால் காய்கறி வியாபாரிகள், சிறு கடைக்காரர்கள், தொழிலாளர்கள் என அடித்தட்டு உழைக்கும் வர்க்கமே கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவர். ரூ.1 லட்சம் வரை மாதாந்திர வரவு வைக்கும் சிறு வணிகர்கள் கூட இந்த அநியாயக் கட்டண வலைக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு குறித்து எச்சரித்த அவர், இந்தியாவின் யுபிஐ சந்தையில் முறையே 53 மற்றும் 35 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள போன்பே, கூகுள்பே ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி சபையின் நெருக்குதலுக்குப் பணிந்தே மோடி அரசு இந்த விதியைத் திணித்துள்ளது.
இந்திய மக்களின் வியர்வை உழைப்பைப் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யும் இந்தச் சூழ்ச்சியை அனுமதிக்க முடியாது. எனவே, யுபிஐ பணப் பரிவர்த்தனைக் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்து, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் எப்போதும்போல் இலவசமாகத் தொடர மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!