மும்பையில் இருந்து நியூசிலாந்துக்கு சர்வதேச கூரியர் மூலம் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்து, 10.99 கிலோ எபெட்ரின் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, சர்வதேச கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான இரண்டு பார்சல்கள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, தரை விரிப்புகள் மற்றும் துணிகளுக்கு இடையே மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ எபெட்ரின் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பார்சல்களில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள், ஜூலை 23-ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஹமீத் என்பவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: இடம் மாறும் முதல்வர் அலுவலகம்! 6 மாத அவகாசம் கேட்ட பொதுப்பணித்துறை... 3 மாதத்தில் முடிக்க உத்தரவு!

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கூரியர் பார்சல்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பேக்கிங் பொருட்கள், டிஜிட்டல் எடை இயந்திரம், ஹீட்-சீலிங் இயந்திரங்கள், போலி அடையாள அட்டைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹமீதிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஜூலை 25-ஆம் தேதி மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில் இருந்து அனுப்பத் தயாராக இருந்த மற்றொரு கூரியர் பார்சலும் சோதனை செய்யப்பட்டது. அதில், பெட்ஷீட்கள் மற்றும் புகைப்படச் சட்டகங்களின் அடுக்குகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3.99 கிலோ எபெட்ரின் கைப்பற்றப்பட்டது.
இதன் மூலம், மொத்தம் 10.99 கிலோ எபெட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் அனுப்பிய இந்தக் கும்பலின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: டூ வீலரில் வந்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் என்.ஆனந்த்!! காரணம் தான் ஹைலைட்!