உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என்று அறிவித்தார். நேற்று மாலை முதல் இந்த முற்றுகை நடைமுறைக்கு வந்துள்ளது.
ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கக் கடற்படை தடுக்கும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியான இந்த ஜலசந்தி வழியாக சீனாவின் 40 சதவீத எண்ணெய் இறக்குமதியும், 30 சதவீத இயற்கை எரிவாயு தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவின் பொருளாதாரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தனது கப்பல்களின் போக்குவரத்தில் எந்தவித தலையீடும் செய்ய வேண்டாம் என்று அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் தனது கப்பல்களுக்கு முழு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி கிடையாது! இனி ட்ரம்ப் ஜலசந்தி!! சிறந்த அமைதி தூதுவர் நான்!! அமெரிக்க அதிபர் தம்பட்டம்!

சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜுன், ஈரானுடனான எரிசக்தி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை சீனா தொடர்ந்து மதிக்கும் என்று தெரிவித்தார். “எங்கள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துக் கொண்டிருக்கின்றன. இது எங்களின் உள்நாட்டு விவகாரம். இதில் யாரும் தலையிட வேண்டாம்” என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, தங்கள் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள எந்த துறைமுகத்தின் பாதுகாப்புக்கும் உறுதியளிக்க முடியாது என்று ஈரான் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக எண்ணெய் சந்தையில் ஏற்கனவே விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முற்றுகை உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் இந்த சூழலில், சீனாவின் கண்டனமும் எச்சரிக்கையும் சர்வதேச அளவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பினரும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!