தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் அதே தெருவில் வசிக்கும் சுந்தர்ராஜனுக்கும் வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
நேற்றிரவு அப்பகுதியில் உள்ள கோயிலில் நடந்த விழாவின்போது மாரியப்பன் தரப்புக்கும் சுந்தர்ராஜன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மாரியப்பனின் மகன் இசக்கிராஜா (20) உயிரிழந்தார். இசக்கிராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஸ்ரீவைகுண்டம் போலீசார் இசக்கிராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் தரப்பைச் சேர்ந்த நான்கு பேர் மீதும் சுந்தர்ராஜன் தரப்பைச் சேர்ந்த பத்து பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இடைத்தரகர்களுக்கு ரூ.100 கோடி!! கொட்டிக் கொடுத்த வீரமணி!

மாணவர் கொலையால் ஆழ்வார்கற்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் மோதல் மூளாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் திமுக எம்.பி. கனிமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் ஐந்து படுகொலைகள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்றும், தவெக அரசு சுரணையற்றுச் சுணக்கம் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பில் விளையாடுவதை நிறுத்த வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர். மோதலுக்கான காரணம் மற்றும் சம்பவ விவரங்கள் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆழ்வார்கற்குளம் பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!