கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலா பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டதாக வெளியான புகார், ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த பரபரப்பான புகாரை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.
தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் கடந்த காலத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்தவர், இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். அவர் 1995 மற்றும் 2014 க்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்ததாகசிறப்பு புலனாய்வு குழுக்கு வாக்குமூலம் அளித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், நேத்ராவதி ஆற்றங்கரையில் உள்ள 13 இடங்களை சிறப்பு புலனாய்வு குழு அடையாளம் கண்டுள்ளது.
ஜூலை 30 ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து இடங்கள் தோண்டப்பட்டன. இருப்பினும், மனித எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை. நேத்ராவதி நதிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஆறாவது இடத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய தோண்டும் பணியில், 6 அடி ஆழத்தில் 12 எலும்புகள், ஒரு மண்டை ஓடு, மற்றும் உள்ளாடைகளில் பயன்படுத்தப்படும் எலாஸ்டிக் பாகங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது விசாரணையை வேகப்படுத்தும் முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: திடீரென உடைந்து விழுந்த பூங்கா ராட்டினம்.. உயிர் பயத்தில் அலறிய மக்கள்.. திக் திக் நொடிகள்..
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்து புதிய விளக்கம் அளித்துள்ளது. அதில், அடையாளம் தெரியாத மரணங்களுக்குப் பிறகு, கிராம நிர்வாகம் சார்பில் சட்டப்படி உடல்கள் புதைக்கப்படும் நடைமுறை இருப்பதாகவும், இது தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எஸ்.ஐ.டி. அதிகாரிகள், கடந்த ஆண்டுகளில் எத்தனை உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன என்பதை தெளிவுபடுத்தும் வகையில், முழு பதிவுகளையும் தாக்கல் செய்யுமாறு கிராம பஞ்சாயத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், எலும்புகள் மற்றும் மண்டை ஓடு மேலதிக ஆய்வுக்காக மருத்துவ நிபுணர்களிடம் அனுப்பப்பட்டுள்ளன. விசாரணையின் அடுத்த கட்டத்தில் இது முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாக இருப்பதால், இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: கவினின் உடலை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்... நெல்லை மருத்துவமனையில் போலீசார் குவிப்பு