மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.11.82 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் கூறப்படும் முன்னாள் ‘மிஸஸ் கேரளா’ போட்டியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகிப் போட்டியில் பங்கேற்று பிரபலமான ஒருவரின் பெயர் இந்த வழக்கில் இடம்பெற்றிருப்பது சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பயணம் செய்த 28 வயதான ஹர்ஷா சன்னி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் அவரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஹர்ஷா சன்னி, ‘மிஸஸ் கேரளா’ அழகிப் போட்டியில் முன்னர் பங்கேற்றவர் என்றும், மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
சோதனையின் போது அவரது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 சீலிடப்பட்ட பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பாக்கெட்டுகளை திறந்து ஆய்வு செய்த அதிகாரிகள், அதற்குள் பச்சை நிறத்தில் உலர்ந்த பூக்கள் மற்றும் மொட்டுகள் போன்ற பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு போன ஆபாச படங்கள்..!! பதறிப்போன பெற்றோர்! சில்மிஷ வாத்தியாருக்கு சிறை!

பின்னர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பயன்படுத்தும் முதற்கட்ட பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தபோது, அவை அதிக வீரியம் கொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.11.82 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களில் ஒன்றாக கருதப்படும் இந்த வகை கஞ்சா, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் கடத்தல் கும்பல்களின் முக்கிய இலக்காக இருந்து வருகிறது.
இதையடுத்து ஹர்ஷா சன்னியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது, இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹர்ஷா சன்னியை, மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மும்பை விமான நிலைய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விழிப்புணர்வை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காரில் வைத்து மனைவியின் கால்களை வெட்டிய கொடூர கணவன்!! குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்!