கேரள மாநிலம் பாலக்காடு அருகே 5 வயது மகள் மற்றும் 3 வயது மகன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் தாயை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையில் இந்த சம்பவம் கொலை வழக்காக மாறியுள்ளது.
பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை கூராங்காடு பகுதியில் ஜான் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு நிவேத்யா (29) என்ற மனைவியும், ஜெனிபர் ஜூலியட் (5), ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற இரு குழந்தைகளும் இருந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் குழந்தைகளை காணவில்லை என நிவேத்யா கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தைகளை தேடியபோது, வீட்டின் குளியலறையில் இருந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டிக்குள் இருவரும் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!
உடனடியாக குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்தில் குழந்தைகள் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்திருக்கலாம் என்றே கருதப்பட்டது.

ஆனால் குழந்தைகளின் மரணம் தொடர்பாக குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். நிவேத்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பதில்களில் முரண்பாடுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்ததாக நிவேத்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், குழந்தைகளின் மரணத்துக்கு பின்னால் வேறு காரணங்கள் இருந்தனவா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக நிவேத்யாவுக்கு வேறு ஒருவருடன் இருந்ததாக கூறப்படும் தொடர்புக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, குழந்தைகள் கொலை செய்யப்பட்டதற்கான முழுமையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தைகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!