மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாட்டின் எரிபொருள் பாதுகாப்பு, உரங்களின் கையிருப்பு, இந்திய கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
பிரதமர் இல்ல வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிரதமரின் முதன்மை செயலர் பிரமோத் குமார் மிஷ்ராவும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நாட்டில் தற்போது உள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் கையிருப்பு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் விரிவான விளக்கத்தை அளித்தன. தற்போதைக்கு அத்தியாவசிய எரிபொருட்கள் மற்றும் உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சகங்கள் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மேற்காசியா பதற்றம் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம்!! முக்கிய ஆலோசனை!

மேலும், மேற்காசிய கடல் பகுதிகளில் பணியாற்றி வரும் இந்திய மாலுமிகள் மற்றும் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அவர்களின் குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல் வழங்கும் அமைப்பை உருவாக்கவும், அவசர உதவி மற்றும் ஆலோசனை வழங்கும் நடைமுறைகளை வலுப்படுத்தவும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேற்காசிய நாடுகளில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு அரசின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ள அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
அதேநேரத்தில், எதிர்காலத்தில் வெளிநாட்டு எரிபொருள் சார்பைக் குறைக்கும் வகையில் சூரிய ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்காசிய பதற்றம் தொடரும் நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்