திருச்சி: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 12 நாட்கள் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார்.
போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் அடிமையாவதை தடுப்பது, சாதி மோதல்கள், மத மோதல்களை உருவாக்க முயலும் சக்திகளை எதிர்ப்பது, மக்களிடையே சகோதரத்துவத்தை வலியுறுத்துவது, திராவிட மாடல் ஆட்சி 2026இலும் தொடர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது என்று வைகோ ஏற்கென்வே அறிவித்திருந்தார்.
இதன்படி, சமத்துவ நடைபயணத்தின் தொடக்க விழா இன்று திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகே உள்ள மாநகராட்சி திடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விழாவில் உரையாற்றினார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கும் வைகோவின் சமத்துவ நடைபயணம்?! காங்கிரஸ் புறக்கணிப்பு!! கூட்டணிக்குள் சலசலப்பு!!
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “2026ஆம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான். தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என்பதுபோல் மக்கள் பிரச்சனைகளுக்காக பல நடைபயணங்கள் மேற்கொண்டவர் வைகோ. அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்று ஆச்சரியப்படும்படி உற்சாகமாக இருக்கிறார். வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும்போது அவரது வயதே கேள்விக்குள்ளாகிறது” என்று புகழாரம் சூட்டினார்.

தள்ளாத வயதிலும் தளராமல் சமூகத்திற்கு தொண்டாற்றிய தந்தை பெரியாரையும், 83 வயதிலும் சமூக வலைதளங்கள் வாயிலாக இளைஞர்களுடன் அரசியல் பேசிய கலைஞர் கருணாநிதியையும் நினைவுகூர்ந்த ஸ்டாலின், “கலைஞருக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ. கலைஞர் நடைபயணம் மேற்கொண்டபோது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ. திராவிட இயக்க பல்கலைக்கழகத்தில் நானும் வைகோவும் ஒன்றாக பயின்றவர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், “இளைஞர்களுக்கு உரிய உத்வேகத்தை வைகோவிடம் பார்க்க முடிகிறது. இந்த சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்பவர்களை ஒவ்வொருவராக தேர்வு செய்து அழைத்து வந்துள்ளார். முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளார். நடைபயணத்தால் என்ன பயன் என்று சிலர் கேட்கிறார்கள்.
ஆனால், காந்தியின் உப்பு சத்தியாகிரக நடைபயணம்தான் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடைபயணங்களே நமது கருத்துகளை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கும்” என்று விளக்கினார்.
இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் வகையில் இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வைகோவின் நடைபயணத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 12 நாட்கள் நடைபயணம் முடிந்து மதுரையில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? தமிழக காங்.,சில் கோஷ்டி மோதல்! விளாசும் நயினார் நாகேந்திரன்!