பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல், பாக்., ராணுவத்தின் அத்துமீறல் என கடந்த சில தினங்களாக ஜம்மு - காஷ்மீர் முழுதும் பதற்றம் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது பல இடங்களில் அமைதி திரும்பியுள்ளது. அக்னுார், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதால், சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளிகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

கட்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு, நேற்று முதல் ஹெலிகாப்டர் சேவை துவங்கியதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.அதே சமயம் ரஜோரியில் பாக்., படைகள் வீசிய பல குண்டுகள் வெடிக்காமல் கிடப்பதால், அவற்றை கண்டறிந்து செயல் இழக்கச் செய்யும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவந்திபுராவின் சில பகுதிகளில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, ராணுவம் அங்கு தேடுதல் வேட்டையில் களம் இறங்கியுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் துப்பாக்கி சப்தம்.. பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்.. காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங்!

நேற்று காலை முதல் நடந்து வரும் வேட்டையின் போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், ராணுவம் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட நதிர் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், இந்த மோதலின் போது, மேலும் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதே போல் இந்தியா - மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று இரவு ராணுவ கிழக்கு கமாண்ட் பிரிவின் ஸ்பியர் கார்ப்ஸ், அசாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
.இந்நிலையில், இந்தியா - பாக்., எல்லையில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில், பாக்., ராணுவ தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில், நம் ராணுவத்தின் ரோமியோ படைப்பிரிவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். பாக்., ராணுவ தாக்குதலில் கடும் பாதிப்பை சந்தித்த வீடுகளில் வசிப்போருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் 48 மணிநேரத்தில் 6 பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட இரு ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் ஐ.ஜி.பி., வி.கே. பேர்டி மற்றும் மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி ஆகியோர் விளக்கம் அளித்தனர். மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் கேலர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 13ம் தேதி கேலர் பகுதியை எங்களின் படைகள் சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

பின்னர், அவர்கள் ராணுவ படைகள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினோம். இதில், பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினோம். அதேபோல, எல்லை கிராமமான டிரால் பகுதியில் 2வது கட்ட ஆபரேஷனை நிகழ்த்தினோம். நாங்கள் கிராமத்தைச் சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகள் வெவ்வேறு வீடுகளில் பதுங்கியிருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த நேரத்தில், கிராமத்து மக்களைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முன் இருந்த சவாலாக இருந்தது. அதன்பிறகு, மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவனான ஷாஹித் குட்டே, ஒரு ஜெர்மன் சுற்றுலாப் பயணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு பெரிய தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தான். மேலும் அவன் பயங்கவாத செயல்களுக்கு நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தான் என மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி கூறினார்.
இதையும் படிங்க: இன்னமும் நீடிக்கும் ரெட் அலர்ட்.. மக்களுக்கு பறந்த உத்தரவு.. ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தெரியுமா?