அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சுங்க வரி நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாகாணங்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தை நாடியுள்ளன. சர்வதேச வர்த்தக கொள்கைகள், வரி உயர்வு மற்றும் அதிகார வரம்பு மீறல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரிகளை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பொருட்கள் உற்பத்தியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகள் மீது கடந்த மாதம் புதிய வரி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
இந்த சுங்க வரி உத்தரவுகள் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் மாநிலங்களின் வர்த்தக நலன்களை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, 25 மாகாணங்கள் அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதையும் படிங்க: டிரம்ப் கூறியது பொய்... ஹார்முஸ் ஜலசந்தி திறக்க எந்த ஒப்பந்தமும் இல்லை; அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
டிரம்ப் நிர்வாகம் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐ தவறாக பயன்படுத்தி வருவதாகவும், உச்ச நீதிமன்றத்தின் முன் இருந்த சட்ட வரம்புகளை மீறி நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் மாகாணங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

மேலும், தற்போதைய சுங்க வரி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கூடுதல் வரிகளை திரும்ப வழங்க வேண்டும் என்றும் அந்த மாகாணங்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளன.
டிரம்ப் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மாகாணங்களில் அரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், கென்டக்கி, மெய்ன், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், மிச்சிகன், மினசோட்டா, நெவாடா, நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூயார்க் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதுதவிர வட கரோலினா, ஓரிகன், பென்சில்வேனியா, ரோட் தீவு, வெர்மான்ட், வர்ஜீனியா, வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களும் இந்த சட்ட நடவடிக்கையில் இணைந்துள்ளன.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக பல மாநிலங்கள் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அமெரிக்க அரசியலில் முக்கியமான சட்டப் போராட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் முடிவு, எதிர்கால சுங்க வரி நடவடிக்கைகளுக்கும் சர்வதேச வர்த்தக உறவுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!