வங்கதேசத்தில் கல்வித்துறை அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் உருவான 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற நையாண்டி இயக்கம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இளைஞர்கள் இந்த இயக்கத்தின் மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலிலும், உயர்நிலைக் கல்விக்கான பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் கல்வித்துறை அமைச்சர் எஹ்சனுல் ஹக் மிலோன், மாணவர்களை "பண்ணைக் கோழிகள்" என விமர்சித்ததாக தகவல் வெளியானது. இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக மாணவர்கள் 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற பெயரில் சமூக ஊடக பக்கங்களை தொடங்கி தங்களது எதிர்ப்பை ஒருங்கிணைக்க ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: வங்காளதேசத்தை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! 51 பேர் பரிதாப பலி..!!

இந்த இயக்கம் மிகக் குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான இளைஞர்களின் ஆதரவைப் பெற்றதுடன், பின்னர் லட்சக்கணக்கானோர் இணைந்ததாக கூறப்படுகிறது. "நாங்கள் அவமதிக்கப்படவில்லை; விழிப்படைந்துள்ளோம்" என்ற வாசகத்தை முன்னிறுத்தி மாணவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், கல்வித்துறை அமைச்சர் எஹ்சனுல் ஹக் மிலோன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த இயக்கத்தின் முக்கிய முழக்கமாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் #BroilerChickenParty என்ற ஹேஷ்டேக்கும் வேகமாக பரவி வருகிறது.
அரசியல் நையாண்டி வடிவில் தொடங்கிய இந்த முயற்சி தற்போது மாணவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளது. வங்கதேச அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: "எல்லா சதிகளையும் முறியடிப்பேன்" இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்! ஷேக் ஹசீனா உறுதி!