ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவருகிறது. ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்களைக் காவு வாங்கியது. பொதுமுடக்கத்தால் வேலையிழந்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டு கடும் சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர். அந்தப் பாதிப்பு சீரடையவே பல ஆண்டுகள் ஆயின. தடுப்பூசி உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு 2022 இறுதியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தியாக ஹாங்காங், சிங்கப்பூரில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஹாங்காங்கில் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் சமீபத்தில் மிக அதிக அளவை எட்டியுள்ளது. மே முதல் வாரத்தில் கொரோனாவால் இறப்புகள் உட்பட கடும் நோய் பாதிப்பு ஓராண்டில் அதிகபட்சமாக 31ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் கழிவுநீரில் காணப்படும் வைரஸ் அளவு, கொரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் ஆகியவை இத்தொற்று வேகமாகப் பரவி வருவதை காட்டுகிறது.

இதுபோல் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூரில் மே முதல் வாரத்தில் வைரஸ் பாதிப்பு முந்தைய வாரத்தை விட 28% அதிகரித்துள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்தது. இதேபோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை 30% ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் தினசரி பாதிப்பு குறித்து தகவல்களை மக்களிடம் சிங்கப்பூர் அரசு பகிர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: 22 குழந்தைகளை காப்பாற்றிய இந்தியர்கள்.. சிங்கப்பூர் அரசு செய்த தரமான சம்பவம்!!

கொரோனா வைரஸ் பரவலுக்கு மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது உள்ளிட்டவை காரணமாக இருந்தாலும், தற்போதைய வைரஸ் திரிபு மிக வேகமாகப் பரவக்கூடியதாகவோ அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவோ தோன்றவில்லை என சுகாதாரத் துறை கூறியுள்ளது. சீனாவின் பிரதான நிலப் பரப்பிலும் தாய்லாந்திலும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!