தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களும், 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவியர்களும் என மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி காலை 9 மணியளவில் வெளியானது.

12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்தனர். மாணவர்கள் 93.16 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதை தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறதா? மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள், தனித் தேர்வர்கள் தேர்வுத் துறை இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை முதல் மே.17 ஆம் தேதி வரை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்குமான விடைத்தாள் நகல்களைப் பெற கட்டணமாக 275 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நகலைப் பெற்ற பின்னர் மறுமதிப்பீடு மற்றும், மறுகூட்டலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இபிஎஸ் பிறந்தநாளுக்காக இந்தியா - பாக்., போரையே தள்ளி வைச்சிட்டாங்க..! வைகை செல்வன் அக்கப்போர்..!