இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், முதற்கட்ட ஒப்பந்தத்தை நீட்டித்து மேலும் சில பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்தி வந்தது.
இதையும் படிங்க: காதலர்களை துளைத்த துப்பாக்கி தோட்டா! இஸ்ரேல் ஊழியர்கள் மீது காசா ஆதரவாளர் நிகழ்த்திய கொடூரம்..!

இதனால், இரு தரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்தியஸ்தம் செய்த நாடுகள் முயற்சித்தன. ஆனால், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், கடந்த மார்ச் 18ம் தேதி காசா மீது தாக்குதல்களை தொடங்கியது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் புதிய தலைவனாக பொறுப்பேற்ற முகமது சின்வாரை கொன்று விட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். ‛காசா போரில் பல ஆயிரம் பயங்கரவாதிகளை அழித்து விட்டோம். முக்கியமாக, ஹமாஸ் தலைவர்களாக இருந்த டெய்ஃப், ஹனியே, யாஹ்யா சின்வார் கதையை முடித்தோம். இப்போது புதிய தலைவன் முகமது சின்வாரும் எங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டு இருக்கிறான் என்று நினைக்கிறோம்’ என நெதன்யாகு சொன்னார்.

ஹமாசுக்கு எதிரான போர் 2023 அக்டோபரில் வெடித்தது. அதன் பிறகு பதவிக்கு வந்த எல்லா ஹமாஸ் தலைவர்களையும் இஸ்ரேல் கொன்று விட்டது.22 ஆண்டுகள் ராணுவ தலைவனாக இருந்த முகமது டெய்ஃபை 2024 ஜூலையில் குண்டு வீசி கொன்றது. ஹமாசின் அனைத்து வடிவிலான அமைப்புகளுக்கும் தலைவனாக இருந்த இஸ்மாயில் ஹனியேவை அதே மாதம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து குண்டு வீசி கதை முடித்தது. ஹனியே மரணத்துக்கு பிறகு ஹமாசின் புதிய தலைவனாக யாஹ்யா சின்வார் பதவி ஏற்றான். அவனையும் அடுத்த சில மாதங்களில் இஸ்ரேல் போட்டுத்தள்ளியது.

அவனை கொல்லும் முன்பு கடைசி நிமிட வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டு அதிர வைத்தது. யாஹ்யா சின்வார் கொலைக்கு பிறகு ஹமாசை வழிநடத்த வந்தவன் தான் முகமது சின்வார். இவன் வேறு யாரும் அல்ல; யாஹ்யா சின்வாரின் சொந்த தம்பி. இப்போது இவனை தான் கருவறுத்து விட்டோம் என்கிறது இஸ்ரேல். அதாவது, கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி காசா முனையின் கான் யூனுஸ் நகரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. அங்கிருந்த மருத்துவமனையை பயங்கரவாதிகள் முகாமாக ஹமாஸ் பயன்படுத்தி வந்ததை இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் மோப்பம் பிடித்தது.

இது பற்றி ராணுவத்துக்கும் ரிப்போர்ட் அனுப்பியது. முகமது சின்வாரும் அங்கு இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனையை துல்லியமாக குண்டு வீசி தகர்த்தது இஸ்ரேல். இதில் 28 பேர் கொல்லப்பட்டனர். முகமது சின்வாரும் அதில் ஒருத்தன் என்பது தான் இஸ்ரேலின் கணக்கு. இருப்பினும் இதுவரை அதை ஹமாஸ் உறுதி செய்யவில்லை. விரைவில் புதிய தலைவனை தேர்வு செய்து விட்டு, முகமது சின்வார் மரணத்தை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் மட்டும் அல்ல; அதற்கு ஆதரவாக சண்டைக்கு வந்த ஹெஸ்புலா தலைவன் ஹசன் நஸ்ரல்லாவையும் இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசாவில் குண்டு மழை.. மீண்டும் தொற்றிய போர் பதற்றம்.. பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!