அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் இஸ்ரேலிய தூதகர ஊழியர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டன்னில் உள்ள capital jewish மியூசியத்தில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகள், ஊழியர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனைவரும் மியூசியத்தை விட்டு வெளியே வந்தனர். மியூசியத்துக்கு வெளியே ஏற்கனவே காத்திருந்த ஆசாமி, தூதரக ஊழியர்களை குறி வைத்து சரமாரியாக சுட்டான்.

இதில் சம்பவ இடத்திலேயே ஒரு ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டனர். அவர்கள் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள். கொல்லப்பட்ட 2 பேருமே காதலர்கள். விரைவில் நிச்சயம் செய்து கொள்ள இருந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசாமியை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவன் 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்பதும், சிக்காகோவை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: காசாவில் குண்டு மழை.. மீண்டும் தொற்றிய போர் பதற்றம்.. பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!

காசாவுக்கு ஆதரவாக இந்த கொடூர சம்பவத்தை செய்ததாக அவன் வாக்குமூலம் அளித்தான். இஸ்ரேல் ஊழியர்களை சுட்டுக்கொன்றதும் அவன் தப்பி ஓடவில்லை. அங்கிருந்தவர்களை பார்த்து, ‛போலீசுக்கு போன் போடுங்கள்’ என்று கத்தினான். சிலர் துப்பாக்கிச்சூடு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 10 நிமிடம் கழித்து போலீஸ் வந்தது. அதுவரை எலியாஸ் அங்கேயே நின்றான். அவனை போலீசார் கைது செய்த போது, ‛காசாவுக்காக செய்தேன். காசா மக்களுக்காக தான் இதை செய்தேன். பாலஸ்தீனுக்கு விடுதலை வேண்டும்’ என்று கோஷம் போட்டான்.

இந்த சம்பவத்துக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார்.‛இந்த இரட்டை கொலைக்கு யூத விரோதம் தான் அடிப்படை. இதோடு இதற்கு முடிவு கட்டுவோம். வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு அமெரிக்காவில் இடமில்லை’ என்று டிரம்ப் சொன்னார். இஸ்ரேலும் இந்த கொடூர சம்பவத்தை கடுமையாக கண்டித்தது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன், யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் உச்சம் இந்த சம்பவம். இதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்கா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக கூறினார். இந்த சம்பவத்தின் முழு பின்னணி குறித்து அமெரிக்க போலீசாரும், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா எங்க சகோதரன்..! பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு.. கொக்காரிக்கும் இஸ்ரேல் வீராங்கனைகள்..!