ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ராணுவ தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை எடுத்தது. அதில் ஒரு நடவடிக்கையாக, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்தது. மேலும், அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கான விளைவுகளை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியது. பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் மே 10 ஆம் தேதி முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. கடந்த 12ம் தேதி இருநாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனியும் தீவிரவாதம் தொடர்ந்தால்.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பகிரங்க எச்சரிக்கை..!

இருப்பினும், சிந்து நதி நீரை திறந்து விடப்போவதில்லை என்ற முடிவில் இருந்து இந்தியா மாறவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. முன்னதாக, பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றுநேர ஓட விட முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிந்து நதி நீரை மீண்டும் திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. பாகிஸ்தான் நீர்வளத்துறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. அதில், தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, தண்ணீரை திறந்து விடுமாறும் கோரிக்கை விடுத்து இருந்தது. எனினும் இந்தியா தனது எண்ணத்தில் உறுதியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய ஷெரீப் சவுத்ரி, “எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்.

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், இதே வார்த்தையை பயன்படுத்தி சமீபத்தில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவை மிரட்டுவதாக எண்ணி பயங்கரவாதி பயன்படுத்திய அதே வார்த்தைகளை தற்போது பாகிஸ்தான் ராணுவத்தில் உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தீவிரவாதிகளை சும்மா விடவே கூடாது! பயங்கரவாத ஒழிப்பு போரில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு..!