காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.

ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: பலூசிஸ்தானில் பள்ளி வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்.. கதறி, உடல் சிதறி இறந்த குழந்தைகள்..!
இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து விளக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கவும் அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய ஜனதாதளம் எம்பி சஞ்ஜய் ஷா தலைமையிலான எம்பிக்கள் குழுவினர் இன்று ஜப்பான் நாட்டிற்கு சென்று, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த குழுவில் பாஜ எம்பிக்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் மற்றும் காங்கிரை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டோக்கியோவில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா மற்றும் அந்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்த நம் எம்பிக்கள் குழு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதைத் தொடர்ந்த இந்தியாவின் நடவடிக்கைகளை விளக்கினர்.பயங்கரவாதத்தின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குவதாக, நம் எம்பிக்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கைக்கு, பாக்., ராணுவம் எதிர் வினையாற்றியது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பயங்கவராதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக ஜப்பான் பிரதிநிதிகள் கூறினர். பஹல்காம் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஜப்பான் வலியுறுத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை பாராட்டிய ஜப்பான் அரசு பிரதிநிதிகள், இந்தியாவிற்கு துணை நிற்பதாகவும் கூறினர்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்த நம் எம்பிக்கள் குழுவினர், அவருடனும் கலந்தாலோசித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலிமையான நடவடிக்கைகளை பாராட்டுவதாக கூறிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் தங்கள் ஆதரவு உண்டு எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாக்., தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. காஷ்மீர் கவர்னர் சொன்ன குட்நியூஸ்..!