கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நர்ஸ் நிமிஷா பிரியா, ஏமன் நாட்டவரான தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்த வழக்கில் 2017 முதல் சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2025 ஜூலை 16 அன்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இந்தியாவிலும், உலகளவிலும் பெரும் அதிர்ச்சியையும், மனிதாபிமான விவாதங்களையும் எழுப்பியுள்ளது.நிமிஷா, தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த 2008இல் ஏமனுக்கு சென்றார். அங்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பின்னர், 2014இல் சொந்தமாக கிளினிக் தொடங்க முயன்றார்.

ஏமன் சட்டப்படி உள்ளூர் கூட்டாளி தேவைப்பட்டதால், தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்தார். ஆனால், அவர் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, நிதி மோசடி மற்றும் மிரட்டல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2017இல், தனது பாஸ்போர்ட்டை மீட்க முயன்ற நிமிஷா, மஹ்திக்கு மயக்க மருந்து செலுத்தியதில், அளவுக்கு மீறிய மருந்தால் அவர் உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை துண்டாக்கி, தண்ணீர் தொட்டியில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சவுதி அரேபிய எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஏமன்..! மேற்கு ஆசியாவில் ஓயாத மரண ஓலம்!!
2018இல், சனாவில் உள்ள விசாரணை நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2020இல் மீண்டும் விசாரணை நடந்து, அதே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. 2023 நவம்பரில், ஏமன் உச்ச நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது. 2024 டிசம்பர் 30 அன்று, ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி இந்த தீர்ப்பை அங்கீகரித்தார். ஏமன் சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மன்னிப்பு அளித்து ‘தியா’ (ரத்தப் பணம்) ஏற்றால் மரண தண்டனை ரத்து செய்யப்படலாம். இதற்காக, நிமிஷாவின் குடும்பமும், ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
40,000 அமெரிக்க டாலர்கள் கூட்டு நிதியாக சேகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டாலும், மஹ்தியின் குடும்பம் இதுவரை மன்னிப்பு அளிக்கவில்லை.நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி, 2024 ஏப்ரலில் ஏமனுக்கு சென்று, தனது மகளை சிறையில் சந்தித்தார். இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இந்திய வெளியுறவுத் துறை, ஈரான் அரசு மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்து வருகின்றன. இருப்பினும், ஏமனின் உள்நாட்டு மோதல்கள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாடு இந்த முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளன.
மரண தண்டனையில் இருந்து மீட்பதற்காக, நிமிஷா பிரியாவின் தாய் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவற்றுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வரும் 16ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக, ஏமன் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
நிமிஷாவின் கணவர் டோமி தாமஸ் மற்றும் அவர்களது 13 வயது மகள், இந்த தண்டனையால் பெரும் மன உளைச்சலில் உள்ளனர். இந்த வழக்கு, வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட உதவி தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில், நிமிஷாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உலகளாவிய ஆதரவு தேவைப்படுகிறது
இதையும் படிங்க: நோபல் பரிசை ட்ரம்புக்கு கொடுங்க!! அசீம் நசீரை தொடர்ந்து வக்காலத்துக்கு வரும் நெதன்யாகு!