ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த டச்சு காலனித்துவ கால தண்டனைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, புதிய தண்டனைச் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
1918ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த இந்தச் சட்டங்கள், 1945இல் இந்தோனேஷியா விடுதலை பெற்ற பிறகும் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்தன. இவை காலாவதியானவை என்று பரவலாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்தோனேஷியாவின் சொந்த கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய சட்டங்களில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விதிகளில் ஒன்று, திருமணத்துக்கு புறம்பான உடலுறவை குற்றமாக்கியுள்ளது. இதற்கு ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேபோல், திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வது (லிவிங் டுகெதர்) தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோதலை நிறுத்த தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல்!! அதிபர் ட்ரம்ப் தலையீட்டால் முடிந்தது பிரச்னை!
இக்குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை உண்டு. இருப்பினும், இந்த இரு குற்றங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் – கணவன் அல்லது மனைவி, பெற்றோர் அல்லது பிள்ளைகள் – புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் அதிபர், துணை அதிபர் அல்லது அரசு நிறுவனங்களை அவதூறு செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

முக்கிய திருத்தமாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு 10 ஆண்டுகள் 'நன்னடத்தை காலம்' வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் குற்றவாளியின் நடத்தை திருப்திகரமாக இருந்தால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும்.
புதிய சட்டங்கள் அமலுக்கு வந்திருந்தாலும், இவை பேச்சு சுதந்திரத்தையும் தனிமனித உரிமைகளையும் பாதிக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் கடும் கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மையினர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்தச் சட்டங்களால் ஒடுக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்கள் இந்தோனேஷியாவின் பழமைவாத கலாசாரத்தை பிரதிபலிப்பதாகவும், நவீன உலகுடன் ஒத்துப்போகாதவை என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தோனேஷியா உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், இந்தச் சட்டங்கள் மத அடிப்படையிலான விதிகளை பிரதிபலிப்பதாகவும் கருதப்படுகிறது. புதிய சட்டங்கள் நாட்டின் சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை... பிரத்யேக செயலியை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின்...!