மேற்காசியப் போர் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் ஈரானில் மட்டும் 1,937 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலி ஜபாரியன் தெரிவித்துள்ளார். இதில் 240 பெண்களும், 212 குழந்தைகளும் அடங்குவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 24,800 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். சர்வதேச ஊடகங்கள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடுகின்றன.
அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதலை இடைமறித்தபோது விழுந்த சிதறல்களால் 11 பேர் உயிரிழந்தனர். இதில் இரு இந்தியர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கடற்படை அட்மிரல் பிராட் கூப்பர், “ஈரானில் 10,000க்கும் மேற்பட்ட இலக்குகளை நாங்கள் தாக்கியுள்ளோம். இஸ்ரேலுடன் இணைந்து திட்டமிட்டதை விட அதிகமான இலக்குகளை அழித்துள்ளோம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 16 விமானங்கள் காலி!! பல ட்ரோன்கள் அழிப்பு! அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரான்!
“ஈரானின் வான் பாதுகாப்பு முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. அந்நாட்டின் கடற்படை கப்பல்களில் 92 சதவீதத்தை அழித்துவிட்டோம். ஏவுகணை, ட்ரோன் மற்றும் கடற்படை உற்பத்தி மையங்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் அழிக்கப்பட்டுள்ளன. இன்னும் நாங்கள் முடிக்கவில்லை. ஈரானின் ராணுவ உற்பத்தி கட்டமைப்பை முழுமையாக ஒழிக்கும் வரை தொடர்வோம்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படைத் தலைவர் அலிரேசா டங்சிரி (64) நேற்று அதிகாலை ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை ஈரான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி உள்ளிட்ட உயர் ராணுவ தளபதிகள் பலர் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலி ஜபாரியன், “போர் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்பட்ட பாதிப்பு மிகவும் கொடூரமானது. பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்” என்று கவலை தெரிவித்தார்.
இந்தப் போர் தொடங்கியதிலிருந்து இரு தரப்பிலும் தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஈரானின் ராணுவ திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. உலக நாடுகள் இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்த சம்பவங்கள் மேற்காசியப் பிராந்தியத்தில் அமைதி மீட்புக்கு பெரும் சவாலாக உள்ளது. எரிபொருள் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பொருளாதார விளைவுகளும் உலக அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரினையை கடக்க கட்டணம் வசூலிக்க திட்டம்!! ஈரான் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்!