மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பெரும் போர் நிலைமையில், ஈரான் தனது பதிலடித் தாக்குதலாக இஸ்ரேல் மீது பெருமளவு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாக ஜெருசலேம் நகரம் உட்பட இஸ்ரேலின் பல பகுதிகளை இலக்கு வைத்து நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக நிகழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஈரான், தனது பதிலடியை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!
இஸ்ரேலின் எயரான் டிஃபென்ஸ் சிஸ்டம் (ஐரான் டோம், டேவிட்ஸ் ஸ்லிங் போன்றவை) பெரும்பாலான ஏவுகணைகளை வழிமறித்தாலும், சில ஏவுகணைகள் தப்பி ஜெருசலேம் உட்பட பகுதிகளில் தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. ஜெருசலேமின் மேற்குப் பகுதியில் ஒரு சாலையில் ஏவுகணை விழுந்து வெடித்ததால் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜெருசலேமுக்கு அருகிலுள்ள பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) நகரில் ஒரு குடியிருப்பு பகுதி மீது நேரடியாக ஏவுகணை விழுந்து குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் மருத்துவ அவசர சேவை (Magen David Adom) தெரிவித்துள்ளது. சில இடங்களில் குண்டு தங்கியிருப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேல் தரப்பில், இந்தத் தாக்குதலில் ஜெருசலேம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு சைரன்கள் ஒலித்து மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஜெருசலேமில் வீடியோக்களில் ஏவுகணைகள் வானத்தில் பறப்பதும், சில இடங்களில் வெடிப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்த மோதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் தனது தாக்குதலை விரிவுபடுத்தி, வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களையும் இலக்கு வைத்துள்ளது. இதனால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட அச்சங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். இரு தரப்பும் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளும் அச்சத்தில், சர்வதேச சமூகம் அமைதி அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் போர் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுகிறது.
இதையும் படிங்க: ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!