மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன.
காசாவை கையில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ட்ரம்ப், நெதன்யாகுவுக்கு செக் வைத்த காமெனி.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக ’பத்வா’..!

ஆனால் எல்லா பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.
முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஒரே நாளில் மட்டும் இஸ்ரேல் குண்டு வீச்சில் காசாவில் 60 பேர் மரணம் அடைந்தனர். 20 மாதங்களாக நடக்கும் போரில் இதுவரை 54 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். தொடர்ந்து போரால் காசா மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தம் கோரி ஐநா தீர்மானம் கொண்டு வந்தது. அதனை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முடக்கியது.

சர்வதேச நாடுகள் அனுப்பிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்காததால், காசாவில், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ''60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காசா விவகாரத்தில் இஸ்ரேலியர்களுடன் எனது பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
அதேநேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம். அமைதியைக் கொண்டுவர வேண்டும். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடும்பத்துடன் கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கிய தலைவர்.. காஸாவில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டம்..!