தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீடியோ ஒன்றின் மூலம் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் தேர்தல் தோல்விக்கான பொறுப்பைத் தானே ஏற்பதாகத் தெரிவித்துள்ளதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய மு.க. ஸ்டாலின் அவர்கள் 2026 தேர்தல் முடிவுகளில் திமுக ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இது நிச்சயமாக நாம் எதிர்பார்த்த முடிவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தோல்விக்கு அவர் இவர் காரணம் என யாரும் யார் மீதும் பழி போட வேண்டாம் என்றும், ஒரு தலைவராக இந்தத் தோல்விக்குத் தானே முழுப் பொறுப்பேற்பதாகவும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். வெற்றி கிடைக்கும்போது வரும் பெருமையைத் தான் ஏற்பது போல, தோல்வியையும் தானே சுமப்பதே ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துத் தொண்டர்களின் கருத்துகளைப் பெற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார். தேர்தல் முடிவுக்கான காரணங்கள் மற்றும் திமுக இனி எப்படி உழைக்க வேண்டும் என்பது குறித்த கருத்துகளைப் பதிய 'குரல்' (Kural) என்ற பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் தொண்டர்கள் தங்களது குரல் மூலமாகவோ (Voice to Type), நேரடியாக டைப் செய்தோ அல்லது காகிதத்தில் எழுதி அதனைப் புகைப்படம் எடுத்தோ தங்களது ஆலோசனைகளைப் பதிவிடலாம். மக்களின் கருத்துகளின் அடிப்படையில் கட்சியின் சிந்தனை, செயல்பாடு மற்றும் அணுகுமுறை என அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, காலத்திற்கேற்றவாறு 'DMK 2.0' உருவாக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினை தோற்கடித்தவன் நான்! எனக்கு அமைச்சர் பதவி இல்லையா? வி.எஸ்.பாபு அதிருப்தி!
அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காகக் கட்சியின் எல்லா மட்டங்களிலும் தேவையான மாற்றங்களைச் செய்யப் போகிறேன் எனத் தெரிவித்த அவர், உடன்பிறப்பே நீங்க சொல்லுங்க, நான் கேட்கிறேன் எனத் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவைச் சீரமைக்கும் பணிகளில் அக்கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வருவது இந்த வீடியோவின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: Breaking News! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்! ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வரலாற்று நிகழ்வு!