பிரபல தமிழ் யூடியூபர்களான கோபி அரவிந்த் ராஜா மற்றும் சுதாகர் ஜெயராமன் (பரிதாபங்கள்) தங்களது ‘சொசைட்டி பாவங்கள்’ என்ற வீடியோவால் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வெளியான இந்த 15 நிமிட வீடியோ, திருநெல்வேலியில் நடந்த ஒரு தலித் இளைஞரின் ‘கவுரவக் கொலை’யை மறைமுகமாகக் குறிப்பிட்டு, சாதி ஆணவம், பாகுபாடு மற்றும் சமூக வன்முறையை விமர்சிக்கிறது.

இதில், சுதாகர் சாதி பெருமையைப் பறைசாற்றும் காட்சிகளைப் பகடி செய்ய, கோபி அதை எதிர்க்கும் கதாபாத்திரமாகத் தோன்றுகிறார். இந்த வீடியோ 45 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ சில சாதி இந்து குழுக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் கார்த்திக் தனுஷ்கோடி என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ முக்குலத்தோர் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவும், சமூகங்களிடையே வன்முறையைத் தூண்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாத்தியா? இனிமையாச்சு புரிஞ்சுக்கோங்க - சீமான்
மேலும், 30 வழக்கறிஞர்கள் இந்த வீடியோவை அகற்றவும், பரிதாபங்கள் யூடியூப் சேனலைத் தடை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.சவுத்ரி, கோபி-சுதாகரை ‘நாய்கள்’ என விமர்சித்து, இனி சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
இப்படி பலர் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கு மாறாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகருக்கு ஆதரவாக களமிறங்கியது தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கோபி-சுதாகர் நடத்தும் "பரிதாபங்கள்" நிகழ்ச்சியில் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை வெளிப்படுத்தியதற்காக அவர்கள் எச்சரிக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்தார். "சரியாகவே பேசியிருக்கிறார்கள், அவர்களை ஏன் எச்சரிக்க வேண்டும்? இது சாதிய திமிரின் வெளிப்பாடு," என சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.
சீமான், கோபி-சுதாகரின் வீடியோக்கள் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாகவும், அதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவது அநீதி என்றும் கூறினார். மேலும், சமூக ஊடகங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கும் உரிமையை அவர் வலியுறுத்தினார். இந்த ஆதரவு, சீமானின் தமிழ் தேசியக் கருத்துகளுடன் இணைந்து, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இருப்பினும், சீமானின் இந்த நிலைப்பாடு சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. அவரது பேச்சு சில அமைப்புகளால் சாதிய உணர்வுகளை தூண்டுவதாக விமர்சிக்கப்பட்டது. முன்னதாக, பெண்கள் அமைப்புகள் குறித்து சீமான் பேசிய கருத்துகள் புகாருக்கு உள்ளான நிலையில், இந்த மற்றொரு சர்ச்சை அவரது பொது உரையாடலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் இந்த ஆதரவு, சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரம் மற்றும் சாதிய அரசியல் குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் மேலும் புதிய திருப்பங்களை உருவாக்கலாம்.
இதையும் படிங்க: எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாத்தியா? இனியாச்சு புரிஞ்சுக்கோங்க - சீமான்..!