அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி ஷெபாஸ் ஷெரீப் இன்று ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டார்.
ஆனால் அந்தப் பதிவின் எடிட் ஹிஸ்டரியில் “Draft – Pakistan’s PM Message on X” என்ற வார்த்தைகள் தவறுதலாக பேஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இந்தப் பிழை வெளியான உடனேயே பதிவு திருத்தப்பட்டாலும், எடிட் வரலாறு உடனடியாக வைரலாகி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் பிரதமர் தனது சொந்தக் கருத்தை பதிவிடும்போது “Draft” என்று எழுதுவது அல்லது “Pakistan’s PM Message” என்று தன்னை மூன்றாம் நபராகக் குறிப்பிடுவது வழக்கமில்லை. இது பொதுவாக ஒருவர் மற்றொருவருக்கு எழுதிக் கொடுக்கும் போது வரும் வடிவமாகும்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்!! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாக்., பிரதமர்!!
இதனால், இந்தப் பதிவு பாகிஸ்தான் பிரதமரால் எழுதப்பட்டது அல்ல, வெளியில் இருந்து (குறிப்பாக அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தரப்பில்) யாரோ எழுதிக் கொடுத்ததை அவர் வெறும் காப்பி-பேஸ்ட் செய்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
ஷெபாஸ் ஷெரீப் தனது பதிவில், டிரம்புக்கு இரு வார கால அவகாசம் அளிக்கக் கோரியிருந்தார். இதைத் தொடர்ந்து டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால் இரு வாரங்களுக்கு தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தார். இந்த மத்தியஸ்தத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தனது சுயமான அரசியல் நிலைப்பாட்டை கூட வெளியிட முடியாத நிலையில் இருப்பதாகவும், அமெரிக்காவின் அறிவுறுத்தலுக்குப் பிறகுதான் இந்த அமைதி முயற்சியில் இறங்கியிருக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.
இருப்பினும், ஷெபாஸ் ஷெரீப் தனது பதிவில் இரு நாடுகளின் தலைமைகளுக்கும் நன்றி தெரிவித்து, ஏப்ரல் 10 அன்று இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த “டிராஃப்ட்” பிழை, அவரது அமைதி முயற்சியின் நம்பகத்தன்மையை சற்று குறைத்தாலும், போர் நிறுத்தம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உலக அரசியல் வட்டாரங்கள் இப்போது இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன.
இதையும் படிங்க: இதுதான் ரைட் டைம்!! ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்!! இந்தியர்களுக்கு தூதரகம் அட்வைஸ்!