ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு ஆன்மீக பலம் அளிக்கும் வகையில், நாட்டின் முன்னணி கிறிஸ்துவ மத போதகர்கள் வெள்ளை மாளிகையில் திரண்டு சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டனர். ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ட்ரம்ப் அவர்களின் தோள்களில் கைகளை வைத்து போதகர்கள் ஆசி வழங்கினர்.
இந்தப் போர்ச் சூழலில் அதிபருக்குத் தேவையான ஞானம், மன உறுதி மற்றும் தெளிவான முடிவெடுக்கும் திறன் கிடைக்க வேண்டும் எனப் போதகர்கள் வேண்டினர். இந்தச் சவாலான நேரங்களில் பரலோகத்திலிருந்து வரும் ஞானம் அதிபரின் இதயத்திலும் மனதிலும் நிறைய வேண்டும் என போதகர் டாம் முலின்ஸ் பிரார்த்தனையை வழிநடத்தினார்.
அதிபருக்காக மட்டுமின்றி, போர்க்களத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் வெற்றிக்காகவும் போதகர்கள் உருக்கமாக ஜெபித்தனர். நமது வீரர்களின் மீதும், அதிபர் மீதும் உமது கிருபையும் பாதுகாப்பும் இருக்கட்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: ஈரான் போர்: அமெரிக்காவிற்கு 100 மணி நேரத்தில் ₹34,000 கோடி செலவு! ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

இந்த நிகழ்வில் ராபர்ட் ஜெஃப்ரெஸ், ரால்ப் ரீட், கேரி பாவர் மற்றும் கிரெக் லாரி (Greg Laurie) உள்ளிட்ட பல முன்னணி சுவிசேஷ தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் ஆபரேஷன் எபிக் பியூரி நடவடிக்கைக்கு ஆதரவாகவும், ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வெள்ளை மாளிகையின் துணைத் தலைவர் டான் ஸ்காவினோ (Dan Scavino), இந்தப் பிரார்த்தனை நிகழ்வின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் முக்கியமான ராணுவ நகர்வுகளின் போது இத்தகைய ஆன்மீக ஆலோசனைகளை அதிபர் ட்ரம்ப் பெறுவது வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவின் இருப்பை ஒழிப்போம்! டெல்லியில் அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!