தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பெரும் அடியாக “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்த மாநாடு, நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும், மக்கள் நலனைப் புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் மாநாடாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் வரும் ஜனவரி 9, 2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்த மாநாடு நடைபெறும்.
கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிக நடத்தும் முதல் பெரிய மாநாடு இதுவாகும். அதேபோல், கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மாநாடும் இதுவே. இதனால், இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் அனைத்து நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜயகாந்தை பின் தொடரும் விஜய்!! விஐபி தொகுதியாக மாறும் விருத்தாசலம்! எகிறும் எதிர்பார்ப்பு!

அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த மாநாடு ஒவ்வொரு தொண்டரின் வெற்றி. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகளும், மகளிர் அணி சகோதரிகளும், தொண்டர் அணி சகோதரர்களும், பொதுமக்களையும் அழைத்துக் கொண்டு பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும், கிளையிலும் பேனர்கள், கொடிகள் அமைத்து, தமிழகம் முழுவதும் இருந்து கடலூருக்கு வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தேமுதிக கடந்த சில ஆண்டுகளாக உள்ளுக்குள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்தது. கேப்டன் மறைவுக்குப் பிறகு கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகினர். சிலர் வேறு கட்சிகளுக்குச் சென்றனர். இந்தச் சூழலில், “துரோகம் செய்தவர்கள், நன்றியை மறந்தவர்கள்” என்று பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டது, அவர்களுக்கு நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக மீண்டும் பலமாக எழுந்து வரும் என்ற நம்பிக்கையை இந்த மாநாடு வெளிப்படுத்தும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாசார் கிராமத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தேமுதிக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். இது 2026 தேர்தலுக்கான தேமுதிகவின் முதல் பெரும் பலம் காட்டும் நிகழ்வாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த டார்கெட் தமிழ்நாடு! உத்தரவாதம் கொடுத்தார் மோடி! உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள்!