ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்புகளை ரஷ்யா கைப்பற்றும் என அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் அமைதி முயற்சிகள் தீவிரமடைந்துள்ள போதிலும், இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படவில்லை.
டிசம்பர் 17ஆம் தேதி ரஷ்ய ராணுவ உயரதிகாரிகளுடனான ஆண்டு கூட்டத்தில் பேசிய புடின், ரஷ்யாவின் நிபந்தனைகளை உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் ஏற்கத் தவறினால், ராணுவ வழியில் தங்கள் இலக்குகளை அடைவோம் என்றார்.
இதையும் படிங்க: நேட்டோவில் இணையப் போவதில்லை!! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி! முடிவுக்கு வருகிறதா போர்?!
போரை ராஜதந்திர வழியில் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புவதாகவும், ஆனால் தேவைப்படின் ராணுவ பலத்தை பயன்படுத்த தயார் என்றும் அவர் கூறினார். ரஷ்ய படைகள் போர்முனையில் முழு மேலாதிக்கத்தை பெற்றுள்ளதாகவும் புடின் உரிமை கொண்டாடினார்.

இதற்கு முன்பு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்கும் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார். மாற்றாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
பெர்லினில் அமெரிக்க அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்ட ஜெலன்ஸ்கி, நிலப்பரப்பு குறித்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெறும் அமைதி முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ரஷ்யா கைப்பற்றிய நிலப்பரப்புகளை அங்கீகரிப்பது மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இந்தச் சூழலில் புடினின் எச்சரிக்கை, அமைதி முயற்சிகளுக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா அமைதி திட்டம்!! ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு!! ஜெலன்ஸ்கி ஆதரவு!!