மாஸ்கோ: உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடினின் ‘யுனைடெட் ரஷ்யா’ கட்சி ஆரம்ப வாக்கு எண்ணிக்கையில் 57.5 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற வாக்குப்பதிவு செப்டம்பர் 20-ம் தேதி நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ரஷ்ய பார்லிமென்டின் கீழ் அவையான ஸ்டேட் டூமாவில் மொத்தம் 450 இடங்கள் உள்ளன. ஆரம்ப முடிவுகளின்படி ஆளும் யுனைடெட் ரஷ்யா கட்சி மற்ற கட்சிகளை விட கணிசமான முன்னிலையில் உள்ளது. இறுதி முடிவுகள் முழுமையான வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே உறுதி செய்யப்படும்.
2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய பிறகு நடைபெற்ற முதல் பார்லிமென்ட் தேர்தல் இதுவாகும். தேர்தலுக்கு முன் பேசிய புடின், வாக்குப்பதிவு மூலம் ரஷ்ய வீரர்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவும், நாட்டின் ஒற்றுமையும் வெளிப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையே கிடையாது! உக்ரைன் போரில் புடினின் அதிரடி எச்சரிக்கை!
இந்த தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களும் கவனம் பெற்றன. தேர்தலின் இறுதி நாளில் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை குறிவைத்து மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சேதம் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, ரஷ்ய தேர்தலில் உண்மையான அரசியல் போட்டிக்கு இடமளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, உக்ரைன் போருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட யாப்லோகோ கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் போட்டியிலிருந்து தடுக்கப்பட்டதாக Reuters தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சில வேட்பாளர்கள் தனித்தொகுதிகளில் போட்டியிட்டனர்.
மேலும், ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு உக்ரைன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உள்நாட்டில் புடின் அரசுக்கு இருக்கும் அரசியல் ஆதரவை வெளிப்படுத்த ரஷ்ய அரசு முயற்சிக்கும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதையும் படிங்க: புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!