தமிழ்நாட்டின் இரண்டாவது நீளமான ஆறான தென்பெண்ணை ஆறு பெங்களூருவிலிருந்து வரும் நச்சுக் கழிவுகளால் அழிந்து கொண்டிருக்கிறது. பெல்லண்டூர், அகாரா, வார்த்தூர் ஏரிகளிலிருந்து வந்து கெலவரப்பள்ளி அணையில் கலக்கும் நச்சு நீர், பால் போல பொங்கி தமிழ்நாட்டிலுள்ள நிலங்களையும், நீர் வளத்தையும் சீரழிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் 2025 ஆய்வு, உயர் புணரிய கோலிபார்ம் அளவைக் கண்டுபிடித்து, இந்த நீர் குளிக்கவோ அருந்தவோ பயன்படாது என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளொன்றுக்கு 1,329 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்காமல் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும், 12 புதிய கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை 2027க்குள் அமைக்கவும், கர்நாடக அரசுக்குத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளை இணைந்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டு, நவம்பர் 14 அன்று இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய நச்சுக் கழிவுகள் குறித்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டால்தான் தமிழ்நாடு அரசும் இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்றும் சூழலியல் சீரழிவுகளையும் மக்களின் சிக்கல்களையும் அரசு தாமாக முன்வந்து சரி செய்யாதா எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் தங்களுடைய கூட்டணிக் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் விதிகளைப் பின்பற்றாத அவர்களுடைய அலட்சியப் போக்கினைத் தமிழ்நாடு அரசும் கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் தமிழ்நாடு கீழ் நீரோட்டப் பகுதியாக இருக்கும் போது கர்நாடக அரசு சரிவர கழிவுநீர் விதிகளை பின்பற்றுகிறதா என்று கண்காணிக்கத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என்று சாடினார்.
இதையும் படிங்க: இத்தனை உயிர்கள் போயும் நீட் ஒழியலையே..! அனிதாவின் நினைவு நாளில் சீமான் ஆதங்கம்..!!
தமிழ்நாடு அரசு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளைக் கண்காணித்து, நவம்பர் 14 அன்று அளிக்கப்படவுள்ள அறிக்கையில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இனியும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் மாநிலங்களுக்கு இடையேயான சூழலியல் சிக்கல்களை ஒன்றிய அளவில் எடுத்துச் சென்று அதற்கான தீர்வுகளையும் எட்டிட வேண்டும் என பாஜக - திமுக அரசுகளை சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசு இதை செய்யத் தவறினால்... நாங்க களத்துல இறங்குவோம்... திமுகவை எச்சரித்த பெ.சண்முகம்....!