பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடும் பாகிஸ்தானின் முகமூடியை சர்வதேச அரங்கில் கிழித்து அதை தனிமைப்படுத்த மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக அனைத்து கட்சி எம்பிக்கள், முக்கிய தலைவர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது.

அவர்களை பல நாடுகளுக்கு அனுப்பி பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவது பற்றியும் ஆதாரங்களுடன் உலக தலைவர்களுக்கு விளக்கிச் சொல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு குழுவின் தலைவராக, காங்கிரஸ் எம்பி சசி தரூரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த அடி எப்போதும் நினைவிருக்கட்டும்.! பாகிஸ்தானை பந்தாடிய இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ!
வெளியுறவு கொள்கைக்கான பார்லிமென்ட் குழுவின் தலைவராக சசி தரூர் உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்திருக்கிறார். ஐ.நா தலைமைச் செயலகத்தில் செயலாளர் அளவிலான பதவி வகித்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டு நலன் என வரும்போது கட்சி பாகுபாடு இல்லாமல் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என பேசக்கூடிய வெளிப்படைத் தன்மை ஆகிய காரணங்களுக்காக சசி தரூரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.

ஆனால், அவர் காஙகிரசில் இருந்து கொண்டே பாஜவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குழுவுக்கு தலைமை தாங்க சசி தரூர் பெயரை காங்கிரஸ் தலைமை பரிந்துரை செய்யவில்லை என பொதுசசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையாகவே சொன்னார். முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா, லோக்சபா காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய், எம்பிக்கள் சயத் நசீர், அமரிந்தர் சிங் ராஜா ஆகியோர் பெயர்களைத்தான் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் ராகுல் பரிந்துரை செய்தார். ஆனால், சசி தரூர் பெயரை அரசே தன்னிச்சையாக தேர்வு செய்துவிட்டது எனவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

பஹல்காம் தாக்குதல் விஷயத்தில் வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் அனைத்து கட்சி குழுவுக்கு சசி தரூரை தலைவராக மோடி தேர்வு செய்ததால் காங்கிரசில் பகிரங்கமாக மோதல் வெடித்துள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் சசி தரூர் பேட்டியளித்தார். குழுவின் தலைவராக மோடி உங்களை தேர்வு செய்ததில் பாஜ அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறதே என கேட்டதற்கு சசி தரூர் கூறியதாவது:
இந்த விஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நாட்டு நலன் என வரும்போது அரசியலுக்கு அங்கு இடமில்லை என்பதுதான் என் கருத்து. நம் அனைவருக்கும் இந்தியன் என்ற உணர்வு வேண்டும். நாடு நெருக்கடியான நேரத்தில் இருக்கும்போது அரசு என்னிடம் உதவி கேட்கும்போது நான் முடியாது என எப்படி கூற முடியும்? வெளியுறவுத்துறை அமைச்சராக நான் பதவி வகித்ததை கருத்தில் கொண்டு குழுவுக்கு நீங்கள் தலைமை தாங்குகிறீர்களா? என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்ட உடனே நான் ஒகே சொல்லி விட்டேன். இதில் எந்த அரசியலும் இல்லை என சசி தரூர் கூறினார்.

காங்கிரசில் இருந்து வேறு 4 பேரின் பெயர்களை ராகுல் பரிந்துரைத்தாராமே.. என கேட்டதற்கு, அதுபற்றி எனக்கு தெரியாது என்றார், சசி தரூர். அது அரசுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையில் நடந்த தகவல் பரிமாற்றம். அவர்களுக்குள் உள்ள பிரச்னை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்றார்.வெளியுறவு கொள்கையில் உங்களுக்குள்ள தெளிவான பார்வை பற்றி நன்கு தெரிந்தபோதும், உங்களை தேர்வு செய்யாமல், வேறு 4 பேரை ராகுல் தேர்வு செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன? அதன்மூலம் உங்களை காங்கிரஸ் கட்சி இன்சல்ட் செய்கிறது என நினைக்கிறீர்களா? என கேட்டதற்கு என்னை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் அவமானப்படுத்தி விட முடியாது;
என்னுடைய தகுதி என்ன? என்பது எனக்கு நன்றாகவே தெரியும்; அது மற்றவர்களுக்கும் தெரியும் என்றார். அனைத்துக் கட்சிக்குழுவுக்கு நீங்கள் தலைமை தாங்குவது காங்கிரஸ் தலைமைக்கு பிடிக்கவில்லையா? என்ற கேள்விக்கு அதை நீங்கள் காங்கிரஸ் தலைமையிடம் தான் கேட்க வேண்டும் என்றார். நாட்டை எதிரிகள் தாக்கும்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஒரே குரலில் பேச வேண்டும்; அதுதான் நாட்டுக்கு நல்லது. நாட்டுக்கு சேவை செய்வது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை. நாட்டுக்காக ஒரு செயலை செய்யும்படி என்னிடம் அரசு கேட்டால், நான் எப்போதும் அதற்கு தயாராகவே இருப்பேன் என கூறினார் சசி தரூர்.
இதையும் படிங்க: இந்தியாவை காப்பி அடிக்கும் பாக்., ஏட்டிக்கு போட்டியாக அமைதி குழு அமைத்து காமெடி..!