வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) பணியாற்றி வரும் 'க்ரூ-11' திட்ட விண்வெளி வீரர்கள் நான்கு பேரையும் முன்கூட்டியே பூமிக்கு திரும்ப அழைத்துள்ளது.
இதற்கு காரணம், குழுவில் ஒருவருக்கு ஏற்பட்ட தீவிர உடல்நலக் குறைவு ஆகும். நாசாவின் 65 ஆண்டு கால வரலாற்றிலும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் 25 ஆண்டு கால செயல்பாட்டிலும் உடல்நலக் காரணத்தால் பணியை பாதியில் நிறுத்தி வீரர்களை திரும்ப அழைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றவர்கள் இந்த குழுவினர். அமெரிக்காவைச் சேர்ந்த ஜீனா கார்ட்மேன் (தளபதி), மைக் பின்கே, ஜப்பானைச் சேர்ந்த கிமியா யுய், ரஷ்யாவைச் சேர்ந்த ஒலெக் பிளாட்டோனோவ் ஆகிய நான்கு விண்வெளி வீரர்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.
இதையும் படிங்க: எலுமிச்சை வடிவில்.. வியக்க வைத்த வைரக் கோள்..!! விஞ்ஞானிகளை திகைக்க வைக்கும் கண்டுபிடிப்பு..!!
இவர்கள் பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் மே மாதம் வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ஜனவரி 7 ஆம் தேதி குழுவில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், ஜனவரி 8 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஸ்பேஸ் வாக் (விண்வெளி நடை) காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விண்வெளி வீரரின் பெயர் அல்லது உடல்நலப் பிரச்சினையின் விவரங்களை நாசா வெளியிடவில்லை. ஆனால், அவர் நிலைமை தற்போது உறுதியானது (stable) என்றும், இது அவசரகால வெளியேற்றம் அல்ல என்றும் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்தார்.
விண்வெளி நிலையத்தில் இதுபோன்ற உடல்நலப் பிரச்சினைகளை முழுமையாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியாத காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழு முழுவதையும் விரைவில் பூமிக்கு திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு வீரர்களும் விரைவில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விண்வெளி பயணங்களில் உடல்நல அபாயங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை இது மீண்டும் நினைவூட்டுகிறது. நாசா இதுபோன்ற சூழல்களை கையாண்டு விண்வெளி ஆய்வுகளை தொடரும் என்று உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு லேப்டாப்பில் கலைஞர், ஸ்டாலின் படம்!! ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கும் மாணவர்கள்!! புது சர்ச்சை!