பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் நடத்திய சண்டை பற்றி விளக்கவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு போக்கு குறித்தும் சர்வதேச நாடுகளிடையே விளக்க, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழு, பனாமா நாட்டிற்கு சென்றுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் சசி தரூர் பேசினார். இந்தியா மீதான பாகிஸ்தானின் எல்லை மீறிய தாக்குதல் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 1989ல் காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து தொடர்ந்து அவர்களின் எல்லை மீறல் தொடர்கிறது.
இதையும் படிங்க: சந்தேகமே வேண்டாம்.. விளைவுகள் மிகக்கடுமையாக இருக்கும்! பாக்., பயங்கரவாதிகளுக்கு எம்.பி. சசி தரூர் தீவிர எச்சரிக்கை..

நாங்கள் எப்போதும் அண்டை நாடுகளுடன் சுமுக போக்கையே விரும்புகிறோம். ஆனால், எங்களை தொடர்ந்து சீண்டும் போது, தாக்குதல் நடத்தும் போது, நாங்களும் திருப்பி அடிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். அப்படித்தான் கடந்த காலங்களில் நடந்த சண்டைகளின் போதும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அவர்கள் ஆதரிக்கும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி தந்தோம். ஆனால், இம்முறை நம் தாக்குதல் வேறு வகையில் இருந்தது.
2015ல் உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி பயங்கரவாதிகளை அழித்தோம். பின் புல்வாமா தாக்குதலின் போதும், எல்லை கட்டுப்பாட கோடு, சர்வதேச எல்லையை தாண்டி அடித்தோம். கார்கில் யுத்தத்தின் போது கூட, நம் படைகள் எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி சண்டையிடவில்லை.

இங்கிருந்தபடியே எதிரிகளை துவம்சம் செய்தோம். ஆனால், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை அழிக்க, எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லையையும் கடந்து, பாகிஸ்தானுக்குள் புகுந்து அவர்களின் இதயப்பகுதியை தாக்கினோம். பயங்கரவாதிகளின் கோட்டையை தகர்த்தோம்.
நாங்கள் அமைதியைத் தான் விரும்புகிறோம். ஆனால், பாகிஸ்தான் அதை விரும்புவதில்லை. எங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை அவர்கள் சொந்தம் கொண்டாட விரும்புகின்றனர். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறாது. எங்கள் மண், மக்களை காக்க நாங்கள் நிறைய விலை கொடுக்க வேண்டி உள்ளது. எங்கள் பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகள், பெண்களை உயிரோடு விட்டனர். இங்கு நடந்ததைப் பற்றி சொல்லுங்கள் எனக் கூறினர்.

அதற்காகத்தான், ஆபரேஷன் சிந்துார் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 26 பேரின் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் மிகப் பெரிய பாடம் புகட்டப்பட்டது. எங்கள் மண், மக்கள் மீதான தாக்குதலை இனியும் பொறுக்க முடியாது. எங்கள் வலி, வேதனைக்கு சரியான பதிலடி தரப்படும். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று அழிப்போம்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது. அவர்களை வளர்த்துவிடுகிறது. இதை உலகறியச் செய்யவே தகுந்த ஆதாரத்துடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பக்க பலமாக நிற்க வேண்டும் என சசி தரூர் பேசினார்.
மத்திய அமெரிக்க நாடானா பனாமாவில் நம் எம்பிக்கள் குழு, மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அரசு பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் ஆபரேஷன் சிந்துார் குறித்தும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் விளக்க உள்ளனர்.
இதையும் படிங்க: இதுதான் ரைட் டைம்! பாக்., பண்ண காரியத்துக்கு பதிலடி கொடுத்தே ஆகணும்! அமெரிக்காவில் முழங்கிய சசி தரூர்!