மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஈரான் நாணயமான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
மதகுரு அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ள ஈரான் இளவரசர் ரெசா பஹ்லவி, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஈரானில் கடும் பதற்றம் நிலவுகிறது.
இதையும் படிங்க: மக்கள் மேல தாக்குதல் நடந்தா நாங்க வருவோம்!! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!! ட்ரம்ப் மாஸ்டர் ப்ளான்!
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஈரான் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். கமேனி ஆட்சியிலிருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஈரான் அரசு, இந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும், அமெரிக்கா சதி வேலை செய்து மக்களை தூண்டிவிடுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க டிரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராணுவம் தொடர்பில்லாத இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ராணுவ அதிகாரிகள் டிரம்பிடம் விளக்கமளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல் வெனிசுலாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, அங்குள்ள கச்சா எண்ணெய் ஆலைகளில் உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து டிரம்ப் கூறுகையில், “நான் வெனிசுலா மக்களை நேசிக்கிறேன். ஏற்கனவே நான் வெனிசுலாவை மீண்டும் வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றி வருகிறேன். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் தற்போது நிலவும் பதற்றம் உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி!! மக்கள் போராட்டம் வெடித்ததில் 10 பேர் பலி!