ஈரானுடனான தற்போதைய இரண்டு வார கால போர் நிறுத்தம் இன்று இரவுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை நீட்டிப்பதாக டிரம்ப் இன்று காலை தெரிவித்தார்.
"எதிர்பார்த்தபடியே, ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டுள்ளது என்பதாலும், பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரிலும், ஈரான் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒருமித்த முன்மொழிவுடன் வரும் வரை, அந்நாட்டின் மீதான நமது தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்," என்று ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"அவர்களுடைய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும் வரை, போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்" என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவரை ஈரானுக்கு எதிரான முற்றுகையை அமெரிக்க ராணுவம் தொடரும் என்றும், தயார் நிலையில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING போர் நிறுத்தம்... ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்...இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு...!
கடந்த திங்கள் கிழமை போர் நிறுத்தத்தை நீட்டிப்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்திருந்த டிரம்ப், மறுநாள் காலையிலேயே அமெரிக்க ஊடகங்களிடம், அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றும், ஈரானுடன் அமெரிக்கா ஒரு சிறந்த ஒப்பந்தத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும், மேலும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டு வீசப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், மேலும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதை உறுதி செய்ய ஈரான் தவறியது குறித்து என்ன செய்வது என்பது பற்றியும் விவாதிப்பதற்காக, டொனால்ட் டிரம்ப் தனது முக்கிய தேசிய பாதுகாப்புக் குழுவுடன் நேற்று பிற்பகல் வெள்ளை மாளிகையில் ஆலோசித்தார். இந்தக் கூட்டத்தில் ஜே.டி. வேன்ஸ், வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறைச் செயலர் பீட் ஹெக்ஸெத், கூட்டுப் படைத் தலைவர் டான் கெய்ன், சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோரும், அத்துடன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்தே ஈரான் மீதான போர் நிறுத்தத்தை நீட்டிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.
ஆன்ல், இன்று பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்றும், ஈரானிய மக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஈரானின் முடிவு குறித்து பாகிஸ்தானிய மத்தியஸ்தருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரானிடம் மீண்டும் பின்வாங்கிய டிரம்ப்... மேலும் 10 நாட்களுக்கு அவகாசம்... உலக நாடுகளுக்கு பகிரங்க அறிவிப்பு...!