ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்திக்க உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார். இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசிய பின்னர் இந்த சந்திப்பு குறித்து முடிவு செய்யப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டிரம்ப்புடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் மிகவும் முக்கியமானதாக இருந்ததாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும், நியூயார்க்கில் நடைபெறவுள்ள சந்திப்பு பல மாற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ராஜதந்திர ரீதியாக சாதகமான சூழல் உருவாகி வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்துக்காக இரு தலைவர்களும் நியூயார்க்கில் இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போருக்கு தீர்வு காண்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடு உயர்வு! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் போட்ட அதிரடி கண்டிஷன்!
சமீபத்தில் அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கீவ் நகருக்கு சென்று ஜெலென்ஸ்கியை சந்தித்தனர். அந்த பேச்சுவார்த்தைகளில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பல்வேறு யோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை செயல்முறையை மீண்டும் தொடங்குவது முக்கியம் என்றும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

அமைதி ஏற்படுத்துவதே உக்ரைனின் முதன்மையான நோக்கம் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். குறிப்பாக மோதலின் தீவிரத்தை குறைத்தல், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களில் அமெரிக்க குழுவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கும் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் வேகம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெறவுள்ள டிரம்ப்–ஜெலென்ஸ்கி சந்திப்பில் பாதுகாப்பு, போர் நிறுத்தம் மற்றும் அடுத்தகட்ட அமைதி முயற்சிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் இடம்பெறலாம் என சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்!! முழு நாட்டையும் தகர்ப்பேன்! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை!