ராஜஸ்தானில் ஓடும் பேருந்தில் பற்றிய தீயில் சிக்கி 20 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற பேருந்து நேற்று பிற்பகல் ஜெய்சால்மர் நகருக்கு வெளியே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தையத் என்ற கிராமத்திற்கு அருகே திடீரென தீப்பிடித்தது. ஓடும் பேருந்துக்குள் முதலில் புகை பரவிய நிலையில், சில நொடிகளில் மளமளவென தீ பரவியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்துக்குள் சிக்கிய 3 குழந்தைகள் உட்பட 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் கடும் வெயில் காரணமாக கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அப்போது பேருந்துக்குள் தீக்காயங்களுடன் இருந்த 16 பேர் மீட்கப்பட்டு, முதற்கட்டமாக ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: மதுரையில் பேரதிர்ச்சி; துப்பாக்கியால் சுட்டு 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை...!
ஜெய்சால்மர் ராணுவ நிலையத்திற்கு அருகிலேயே பேருந்து தீப்பற்றி எரிந்ததால், மீட்புப் பணிகளை போர் கோடாரி பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆஷிஷ் குரானா மற்றும் அவரது குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இராணுவ அதிகாரிகளும் காவல்துறையினரும் கடுமையாக போராடி தீயை அணைத்த போதிலும், பேருந்துக்குள் உடல்கள் பயங்கர சூடாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்துக்குள் இறந்தவர்களின் உடல்களை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகே மீட்க முடிந்ததாக ஜெய்சால்மர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
பேருந்தின் ஏர் கண்டிஷனிங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட், எரிவாயு கசிவை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. இறந்தவர்களில் ஆறு பேர் ஜோத்பூரைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் ஜெய்சால்மரைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் எரிந்துள்ளதால், தடயவியல் பகுப்பாய்வு மற்றும் டிஎன்ஏ சோதனைக்காக ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ.50,000-உம் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்... தீபாவளி அன்று வெளியானது முக்கிய எச்சரிக்கை...!