ஜம்மு-காஷ்மீரில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மாயமாகியிருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூலை 23-ஆம் தேதி வரை ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மிதமானது முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி ரஜோரி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கி இரவு முழுவதும் இடைவிடாத கனமழை பெய்தது. இதனால் ஆறுகள், ஓடைகள் வேகமாக நிரம்பி கரைபுரண்டன. பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரஜோரி பேருந்து நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புப் படை, ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் இணைந்து மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அமர்நாத், வைஷ்ணவ தேவி யாத்திரைக்கு திடீர் தடை..! லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை கண்காணிக்க காவல்துறையினர் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், ஆற்றங்கரை மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் வெள்ள நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு விரிவாக கேட்டறிந்தார். தற்போது மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக வழங்கும் என்று உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து மழை நீடிக்கும் என எச்சரித்துள்ளதால், அடுத்த சில நாட்களும் ஜம்மு-காஷ்மீரில் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமர்நாத் பனி லிங்கம் 90% கரைந்தது... 6 நாளில் ஏற்பட்ட அதிர்ச்சி மாற்றம்... விஞ்ஞானிகள் கூறும் காரணம் என்ன?