தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஆகஸ்ட் 22ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். திருநெல்வேலியில் நடைபெறவுள்ள பாஜகவின் மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், பாஜகவின் தமிழக அரசியல் வியூகத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இல.கணேசன் உடல் இன்று நல்லடக்கம்!! நாகாலாந்தில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!!
அமித்ஷாவின் வருகை தமிழகத்தில் பாஜகவின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதுடன், கூட்டணி கட்சிகளுடனான உறவை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருகையின் மூலம், திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை அமித்ஷா மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை விரிவாக்குவதற்கு, அவரது இந்தப் பயணம் முக்கிய பங்கு வகிக்கும். மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய பயணங்களில், அமித்ஷா கூட்டணி அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்துள்ளார். இந்த முறையும், தமிழகத்தில் திமுகவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள புதிய உத்திகளை வகுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு, அடிமட்ட தொண்டர்களை ஒருங்கிணைத்து, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவதற்கு உதவும். அமித்ஷாவின் பயணம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: செப்.3ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!