தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதாவுக்கு ஆந்திரப் பிரதேச அரசு முக்கியமான ஆன்மீகப் பொறுப்பை வழங்கியுள்ளது. விஜயவாடாவின் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் (கனகதுர்க்கை அம்மன் கோயில்) அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக (Special Invitee) அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில தேவாலய மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் கே.கன்ன பாபு செப்டம்பர் 7, 2026 அன்று இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை பிறப்பித்தார். இந்த நியமனத்தின் மூலம் தேவஸ்தானத்தின் மேம்பாட்டுப் பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கூட்ட நிர்வாகம் போன்றவற்றில் சுஷ்மிதா தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குவார். நவராத்திரி, தசரா உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஜாத்திரை காலங்களில் கோயில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து உதவுவார்.
கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கும் அறங்காவலர் குழுவிற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதும் அவரது பங்காகும்.இந்தக் கோயில் ஆந்திரப் பிரதேசத்தில் திருமலைக்கு அடுத்தபடியாக முக்கியமான புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக நவராத்திரி காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதையும் படிங்க: யாருக்கு வெற்றி வாய்ப்பு.? விறுவிறு அரசியல் களம்... இடைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்.!!

தனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுஷ்மிதா, முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். “கனக துர்க்கை அம்மனின் சேவையில் மிகுந்த பக்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்றுவேன்” என உறுதி அளித்துள்ளார். சிரஞ்சீவி குடும்பத்தினர் திரைத்துறைக்கு அப்பால் ஆன்மீக மற்றும் பொது வாழ்விலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேச துணை முதல்வராகப் பணியாற்றுகிறார். மற்றொரு சகோதரர் நாகபாபு சட்ட மேலவை உறுப்பினராகவும், அண்மையில் ஆந்திர பசுமைச் சங்கத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். சிரஞ்சீவியின் மனைவி சுரேகா கொனிடெலா தெலங்கானாவின் யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்ம சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
ஆடை வடிவமைப்பாளராகவும் ‘கோல்டு பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றும் சுஷ்மிதா, இந்த நியமனம் மூலம் பொது வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். கோயில் மேம்பாட்டிலும் பக்தர் நலனிலும் அவரது பங்களிப்பு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “வெற்றி பெற்றே ஆக வேண்டும்”..!! இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவின் தீவிர ஆதரவு வேட்டை!!