கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி, மன்னார்க்காடு அருகே குமரம்புத்தூரைச் சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் நிபா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரது மகனுக்கு தற்போது நிபா தொற்று உறுதியாகியுள்ளது. இது மாநிலத்தில் உயர் எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மற்றும் திரிசூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், மூன்று நிபா பாதிப்பு நபர்களுடன் தொடர்பில் இருந்த 675 பேர் கண்காணிப்பு பட்டியலில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. கீழே விழுந்த பழங்களை சாப்பிடாதீங்க.. அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்..!
இதில், 178 பேர் பாலக்காட்டில் உள்ள இரண்டாவது நோயாளியுடன் தொடர்புடையவர்கள். மலப்புரத்தில் 82 மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவை நெகட்டிவ் என உறுதியாகியுள்ளன. மேலும், 38 பேர் மிக உயர் ஆபத்து வகையிலும், 139 பேர் உயர் ஆபத்து வகையிலும் கண்காணிக்கப்படுகின்றனர். பாலக்காட்டில் 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மருத்துவமனை வருகைகளைக் கட்டுப்படுத்தவும், முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) பாலக்காட்டில் 160 வெளவால்களின் மாதிரிகளை சேகரித்து, புனேவுக்கு ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் நிபா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கேரளா மாநிலம் பாலக்காடு மற்றும் மலப்புரம் பகுதியில் இருந்து தமிழக எல்லையான நாடுகாணி வழியாக அதிக அளவிலான வாகனங்கள் தமிழகத்திற்கு வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, நோய் தாக்கத்தின் அறிகுறிகள் இருப்பது குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகியவற்றில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளிட்ட 20 வழித்தடங்களில் கேரளாவிலிருந்து வருவோரை தீவிரமாக பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பழங்களை நன்கு கழுவி உண்ணவும், வவ்வால் சுரப்புகளுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போடுறா எல்லையில கேட்டை... கேரளாவில் தீயாய் பரவும் நிபா வைரஸ் - ஹை அலர்ட்டில் தமிழ்நாடு...!