பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.
கடந்த கால தீவிரவாத தாக்குதல்களை நினைவுகூர்ந்து பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தென் மாநிலங்களில் ரோஹிங்கியா இடம்பெயர்வு மற்றும் கடலோர ஊடுருவல் அச்சுறுத்தல்கள் குறித்து அதிக விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் இருந்து வருகின்றன. எனவே எல்லைகளில் நமது ஆயுதப் படைகளைப் போலவே நமது காவல் துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கடுமையான கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் துறைகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பை வலியுறுத்தி ஆந்திரப் பிரதேச டிஜிபிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். அச்சுறுத்தல்களைத் தடுக்க அறிமுகமில்லாத நபர்களைக் கண்காணிக்க வேண்டும். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா காவல் துறையின் சமீபத்திய கூட்டு நடவடிக்கை பயங்கரவாத தொடர்புகளைக் கண்டுபிடிக்கும் வகையில் உள் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது புலம்பெயர்ந்தோர் நடவடிக்கைகளில் கடுமையான மேற்பார்வையின் அவசியத்தை வலுப்படுத்தி இருக்கிறது.

ரோஹிங்கியா குடியேற்றங்கள் உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கின்றன. புலம்பெயர்ந்தோர் ரேஷன், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளைப் பெறுகிறார்கள். இது நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. சட்டவிரோத குடியேறிகள் எவ்வாறு அதிகாரப்பூர்வ ஆவணங்களை அணுகுகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. மாநிலத்தில் அவர்களின் நிரந்தரக் குடியேற்றத்துக்கு உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'பாக்., எலிகளே... நாகத்தின் மூச்சொலிக்கு முன் நிற்க முடியுமா..? திருக்குறளின் 2 அடியில் பவன் கல்யாண் பதிலடி..!
இதையும் படிங்க: தமிழர்களுக்காக காட்டமாக குரல் எழுப்பிய பவன் கல்யாண் - ஏன் இந்த திடீர் பாசம்?