பிஹார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் (ஆர்.ஜே.டி.) தலைவருமான தேஜஸ்வி யாதவ், பெண்களுக்கான புதிய அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளார். "ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையன்று, பிஹார் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.30,000 நிதியுதவி செலுத்தப்படும்" என்று உறுதியளித்தார். 
இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு பெண்ணும் ரூ.1.5 லட்சம் பெறுவார் என்று கூறினார். முதல்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று (நவம்பர் 4) பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிஹார் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-இல் நடக்கும். "நவம்பர் 18-இல் நாங்கள் பதவியேற்போம். இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) வேரோடு பிடுங்கி எறியப்படும்" என்று தேஜஸ்வி நம்பிக்கை தெரிவித்தார். "மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். 20 ஆண்டுகால ஆட்சியை அகற்றுவார்கள்" என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பீகார் தேர்தலில் கடைசி நேர ட்விஸ்ட்! லாலு குடும்பத்துக்கே பேரிடி டில்லி கோர்ட் அதிரடி!
பெண்கள் நலன் குறித்து பேசிய தேஜஸ்வி, "ஏற்கனவே அறிவித்த திட்டங்களை தாய்மார்களும் சகோதரிகளும் வரவேற்றுள்ளனர். ஜனவரி 14 மகர சங்கராந்தியன்று பெண்களின் கணக்கில் ரூ.30,000 வரவு வைக்கப்படும். ஆண்டுதோறும் இது தொடரும். பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்" என்றார். இது பெண் வாக்காளர்களை கவரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கும் உறுதியளித்த தேஜஸ்வி, "எங்கள் ஆட்சி அமைந்தவுடன் விவசாய பாசனத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். நெல் மற்றும் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ரூ.300 மற்றும் ரூ.400 கூடுதலாக வழங்கப்படும்" என்றார். அரசு ஊழியர்கள், போலீஸ், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 70 கி.மீ.க்குள் மட்டுமே பணியிட மாற்றம் என்றும் உறுதியளித்தார்.
மகா கூட்டணி (இந்தியா கூட்டணி) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. என்.டி.ஏ. (நிடிஷ் குமார் தலைமையில்) மீண்டும் ஆட்சி அமைக்க உழைக்கிறது. தேஜஸ்வி, "பிஹாரை கட்டியெழுப்புவதே எங்கள் நோக்கம்" என்று வலியுறுத்தினார். இந்த அறிவிப்புகள், தேர்தல் களத்தை சூடேற்றியுள்ளன. பெண்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஆர்.ஜே.டி. ஆதரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேசிய கட்சிக்கு இப்படி ஒரு நிலைமையா? ஐயோ பாவம்! காங்., கட்சிக்கு வந்த சோதனை!