புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அட்டவணைப்படுத்தப்படாத 137 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் 543 பிராண்டுகள் மற்றும் பேக் அளவுகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை திருத்தி அமைத்துள்ளது. இந்த மாற்றங்கள் வரும் நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகின்றன.மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகப்படியான வர்த்தக லாப வரம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தக லாப வரம்பை அதிகபட்ச சில்லறை விலையில் 30 சதவீதமாக நிர்ணயித்ததன் விளைவாக, பல மருந்துகளின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. சில மருந்துகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான குறைப்பு காணப்படுகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவச் செலவில் பெரிய அளவில் சேமிப்பு அடைய முடியும்.மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பால்போசிக்லிப் மருந்தின் ஒரு பிராண்ட், 21 காப்சூல்கள் கொண்ட பாக்கெட்டுக்கு முன்பு ரூ.40,421 ஆக இருந்தது.

இப்போது அதன் விலை ரூ.2,720 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 93 சதவீத குறைப்பாகும். கீமோதெரபி சிகிச்சையில் பயன்படும் தியோடெபா ஊசி மருந்தின் 100 மில்லிகிராம் குப்பியின் விலை ரூ.80,072-லிருந்து ரூ.7,150 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 91 சதவீத சரிவு ஆகும். இந்த இரு மருந்துகளும் மிக அதிகமான விலைக்குறைப்பைப் பதிவு செய்துள்ளன.இதுபோன்ற குறைப்புகள் பல பொதுவான மற்றும் பயோசிமிலர் பிராண்டுகளிலும் காணப்படுகின்றன.
இதையும் படிங்க: தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!
மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், லுகேமியா உள்ளிட்ட பல்வேறு வகை புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. சில மருந்துகளின் விலை பாதிக்கும் குறைவாக ஆகியுள்ளது. பல பிராண்டுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான குறைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்டகால சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மீண்டும் மீண்டும் மருந்து வாங்கும் செலவு பெரிய அளவில் குறையும்.இந்த விலை திருத்தம் அக்டோபர் 17 அன்று வெளியிடப்பட்ட வர்த்தக லாப வரம்பு சீரமைப்பு உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: பிராட்வே கோழி மார்க்கெட்டில் பிராணிகள் விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி அதிரடி!