கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ள விசாரணையில், பொங்கல் பண்டிகை வரை இடைக்காலத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கோரிக்கையை ஏற்று, அடுத்தகட்ட விசாரணையைப் பொங்கலுக்குப் பிறகு நடத்தச் சிபிஐ அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.
இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற முதல் நாள் விசாரணை நிறைவடைந்த நிலையில், நாளை மீண்டும் ஆஜராகுமாறு அதிகாரிகள் முதலில் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் திருநாளை முன்னிட்டு விசாரணைத் தேதியை மாற்றி வைக்குமாறு விஜய் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலித்து, அதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் விஜய் இன்று இரவு அல்லது நாளை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பிரசாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இன்று காலை 11:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், "நாளை (ஜனவரி 13) மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும்" என அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், வரும் 14, 15 ஆகிய தேதிகளில் தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளதால், தனது குடும்பத்தினருடனும் தொண்டர்களுடனும் இருக்க விரும்புவதாக விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: “தவெக VS ஐபிஎஸ் மோதல்: க்ளைமாக்ஸ் இதுதானா?” ஐபிஎஸ் ஈஷா சிங் டெல்லிக்கு மாற்றம்; பின்னணியில் யார்?
விஜய்யின் மனிதாபிமான அடிப்படையிலான இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிபிஐ அதிகாரிகள், பொங்கல் பண்டிகைக்குப் பின் மற்றொரு தேதியில் ஆஜராக அவருக்கு விலக்கு அளித்துள்ளனர். அடுத்தகட்ட விசாரணைக்கான தேதி மற்றும் விபரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் எனச் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத் தடை மற்றும் சிபிஐ விசாரணை என நெருக்கடிகளில் சிக்கியிருந்த விஜய்க்கு, இந்தப் பொங்கல் விடுமுறை ஒரு தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பொங்கல் முடிந்து தை பிறந்தால் தனக்கு ஒரு ‘நல்ல வழி’ பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் விஜய் சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க: “பொங்கல் வரை பொறுத்திருங்கள்!” – தவெக-வில் இணையப்போகும் முக்கியப் புள்ளிகள் யார்? செங்கோட்டையன் சூசகம்!